2025 ஜூலை 09, புதன்கிழமை

கிழக்கு மாகாண ஆசிரியர்களை அம்மாகாணத்தில் நியமிக்கப் பணிப்பு

Suganthini Ratnam   / 2015 மே 06 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன் கே.எல்.ரி.யுதாஜித்

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் பயிற்சியை முடித்துக்கொண்டு  வெளியான ஆசிரியர்களுக்கு  அந்த மாகாணத்தில் ஆசிரிய  ஆளணிப் பற்றாக்குறையுள்ள பாடசாலைகளில் நியமனங்களை வழங்கவேண்டும் என்று பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் பயிற்சியை  முடித்துக்கொண்டு  வெளியான ஆசிரியர்களுக்கு வெளி மாகாணங்களில் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்  தலைமையிலான குழுவினர்  கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமை அவரது அமைச்சில் செவ்வாய்க்கிழமை (05) சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போதே, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளதாக  கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் 1,700 இற்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளன.  இந்த நிலையில், கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் பயிற்சியை  முடித்துக்கொண்ட  ஆசிரியர்களை வெளி மாகாணங்களு;கு  நியமிப்பது தொடர்பில்  அதிருப்தி வெளியிடப்பட்டது.

எக்காரணம் கொண்டும் பயிற்சியை  முடித்துக்கொண்ட  கிழக்கு மாகாண ஆசிரியர்களை வெளி மாகாணங்களுக்கு அனுப்பும் முயற்சியை உடனடியாக  கைவிட்டு, ஆசிரியர் வெற்றிடங்களுள்ள கிழக்கு மாகாணப் பாடசாலைகளில்  அவர்களை நியமிக்கவேண்டும் என்று கல்வி அமைச்சரிடம் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் கேட்டுக்கொண்டனர்.

இதன்போது, கிழக்கு மாகாணத்தில்  தமிழ்மொழி  மூலமான பாடசாலைகளில் ஆசிரியர்களின் தேவையேதும் இல்லை என்று கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அறிக்கை சமர்ப்பித்ததன் காரணமாகவே, மேற்படி  ஆசிரியர்களை வெளி மாகாணங்களுக்கு  அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டதாக கல்வி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்ஹ தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹஸன் அலி, போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .