2025 ஜூலை 09, புதன்கிழமை

பாடசாலை என்ற எண்ணக்கரு மகிழ்ச்சியை தரக்கூடியதாக அமைய வேண்டும்

Sudharshini   / 2015 மே 06 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

பாடசாலை என்ற எண்ணக்கரு எப்பொழுதும் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாக அமைந்திருக்க வேண்டும். அங்கே மாணவர்களும் அவர் தம் பெற்றோரும், ஆசிரியர்களும் அதிபர்களும் கல்வி அதிகாரிகளும் மகிழ்ச்சியடைய வேண்டும். இப்படிப்பட்டதொரு பாடசாலைச் சூழலை ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள், அதிகாரிகள் என எல்லோருமாகச் சேர்ந்துதான் வடிவமைத்து வளர்த்தெடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மத்திய வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ. சேகு அலி தெரிவித்தார்.

ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியில் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு புதன்கிழமை (06) இடம்பெற்றது. இந்நிகழ்வில்,  கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

பாடசாலையின் முக வெற்றிலைகள் மாணவர்களே. அந்த வெற்றிலை கிழிந்து விட்டால் அதன் முக அழகும் கிழிந்து விடும். எனவே, அந்த முக வெற்றிலைகள் கிழிந்து போய் விடாமல் பாதுகாப்பது அவசியமாகும்.

மாணவர்களும் பெற்றோரும் ஒருமிக்க மகிழ்ச்சியை அனுபவிக்கும் ஒரு தலமாகத்தான் கல்லூரிகள் தோற்றம் பெற்றன. ஆனால்,  பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் அங்கு ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்ற சிந்தனை உருவாகி, அது அமுலுக்கு வந்தபோது அதை தமக்கான ஒரு நெருக்கடியாக மாணவர்கள் உணரத் தொடங்கினார்கள்.

பாடசாலைச் சூழல் மகிழ்வானதாக இருக்கும் போதுதான் அங்கு கற்கின்ற மாணவர்கள் எதிர்காலத்தில் அறிவும் ஆற்றலும் மிக்கவர்களாக திகழ்வார்கள்.

எப்பொழுதும் நெருக்கடிக்குள்ளாகி கவலையும் கண்ணீருமாக காலங்கழிக்க வேண்டியேற்படும்போது நல்லவர்களை, வல்லவர்களை, நானிலம் போற்றுகின்ற மாணவச் செல்வங்களை நம்மால் உருவாக்க முடியாது போய்விடும்' என அவர் குறிப்பிட்டார்.

பாடசாலை அதிபர் ஏ.எம். தௌபீக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஏறாவூர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எல்.கே.ஜி. காமினி இகலவெல, வாழைச்சேனை மத்தி பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜுத் உட்பட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் 60 மணவத் தலைவர்களுக்கு அதிதிகளால் சின்னம் சூட்டப்பட்டதுடன் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .