2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

எதனோல் நிறுவனத்தை நிறுத்தத் தீர்மானம்

Gavitha   / 2017 மார்ச் 27 , பி.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு கல்குடாவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற, எதனோல் நிறுவனத்துக்கான கட்டடத்தின் நிர்மாணப்பணிகளை இடைநிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

மட்டக்களப்பு மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் நேற்று (27) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தீர்மானம் எட்டப்பட்டது.  

மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவரான பிரதியமைச்சர் எம்.எஸ்.எம்.அமீர் அலி தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தின் போது, இந்த விவகாரம் தொடர்பில, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கடிதம் எழுதுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.  

எதனோல் உற்பத்தி நிலையம் பெரும் பிரச்சினையாக இருக்கின்றது. அதனை நிறுத்த வேண்டிய பொறுப்பு மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் எமக்கிருக்கிறது என்றும் அந்த கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது.  

இந்த நிறுவனத்துக்கான கட்டட நிர்மாணத்தை இடைநிறுத்துவதற்கான தீர்மானம் தொடர்பிலான கடிதத்தினை ஜனாதிபதி, பிரதமர், கிழக்கு மாகாண ஆணையாளர், மதுவரித் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் மற்றும் முதலமைச்சர் உள்ளிட்டவர்களுக்கும் அனுப்பி வைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

  இதன்போது கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாருக், “கடந்த பல மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டங்களில் மட்டக்களப்பிலுள்ள 67 மதுபான சாலைகளை மூடுவது தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டாலும், இதுவரையில் ஒன்றுகூட மூடப்படவில்லை” என்றார்.  

அதற்குப்பதிலளித்த பிரதி அமைச்சர் அமீர் அலி, “மக்கள் சக்தி சரியாகச் செயற்பட்டால், இதனைச் செய்ய முடியும். அத்துடன் அரசியல் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றாக இணைந்து இதற்கான முடிவினை மேற்கொள்ள வேண்டும். அதற்காக ஒரு தினத்தில் சந்தித்துக் கலந்துரையாடல் ஒன்றை நடத்துவோம்” என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X