2025 மே 22, வியாழக்கிழமை

’20ஐ ஆதரித்தவர்கள் ஜனநாயக விரோதிகள்’

Kogilavani   / 2017 செப்டெம்பர் 15 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதூஜித்

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆதரித்தவர்கள், ஜனநாயக விரோதிகள் என்று, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் வி.கமலதாஸ் தெரிவித்தார்.

'இந்த ஆட்சியாளர்களுடனும், மாகாண சபையுடனும் ஒப்பிடுகையில் உரிய காலத்துக்கு முன்பதாகவே ஆட்சியைக் கலைத்து, தேர்தலை நடத்;தியவர்களையே ஜனநாயகவாதிகள் என்று கூறக்கூடியதாகவுள்ளது. இந்தச் சட்டமூலத்தை ஆதரித்தவர்கள், ஜனநாயக விரோதிகள் என்றே கருதப்படுவார்கள்' என்றும் அவர் கூறினார்.

20ஆவது திருத்தச் சட்டமூலம் கிழக்கு மாகாணத்தில் அங்கிகரிக்கப்பட்டமைத் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், .

'அரசியல் அமைப்புச் சட்டத்தின் 20ஆவது திருத்தச் சட்டமூலம், என்னவென்றே மக்களுக்கு வெளிப்படுத்தப்படாமல் மூடிய அறைக்குள்ளேயே, காலாவதியாகிப் போன மாகாணசபை உறுப்பினர்கள் அரங்கேற்றியுள்ளார்கள். கிழக்கு மாகாண சபை கிழக்கு மாகாண தமிழ் முஸ்லிம் மக்களுக்கு பூ சுத்துகின்ற செயற்பாட்டையே முன்னெடுக்கின்றது.

கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தச் சட்டமூலத்தை ஏகமனதாக ஏற்று வாக்களித்துள்ளது.

மாகாணசபைத் தேர்தலை உரிய நேரத்துக்கு நடத்தவிடாது, ஒரு வருடத்துக்கு ஒத்தி வைத்து வரப் போகின்ற காலத்துக்கும் தங்களின் சுகபோகங்களை அனுபவிக்க எண்ணியுள்ளார்கள்.

இன்னும் சொல்லப்போனால், கிழக்கு மாகாண சபை மக்களின் நிதியை இன்னும் ஒரு வருடத்துக்கு அனுபவிக்கப் போகின்றது என்றே சொல்ல வேண்டும்.

இந்த ஆட்சியாளர்களுடனும், மாகாண சபையுடனும் ஒப்பிடுகையில், உரிய காலத்துக்கு முன்பதாகவே ஆட்சியைக் கலைத்து தேர்தலை நடத்தியவர்களையே ஜனநாயகவாதிகள் என்று கூறக்கூடியதாகவுள்ளது.

இந்தச் சட்டமூலத்தை ஆதரித்தவர்கள் ஜனநாயக விரோதிகள் என்றே கருதப்படுவார்கள். இவர்கள் தமக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைத்திருக்கின்றார்கள். மக்களின் உரிமைகளைக் குறுக்கு வழியில் பறித்தது மட்டுமல்லாமல், மத்திய அரசுக்கு அடகு வைத்திருக்கின்றார்கள். மக்களை முட்டாள்கள் என்று எண்ணிச் செயற்படுகின்றார்கள்.

எமது மாவட்டத்தை எடுத்துக் கொண்டால்,  முஸ்லிம் பிரதிநிதிகள் தங்களுக்கு வாக்களித்த தங்கள் பிரதேச மக்களுக்கு ஏராளமான பணத்தை செலவழித்து அந்த அந்த பிரதேசங்களை அபிவிருத்திகள் செய்கின்றார்கள். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களோ அமைச்சர்களோ இவ்வாறு  மக்களுக்கு செய்வதை காண முடிவதில்லை.

உரிமைப் போராட்டத்தில் பல இழப்புகளுக்கு ஆளாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு செலவிடப்பட வேண்டிய அபிவிருத்தி நிதிகள், குறிப்பிட்ட இனத்திற்கு மாத்திரம் பயன்படக் கூடிய விதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வழிசமைத்துக் கொடுத்திருக்கின்றனர். இன்னுமொரு வருடத்திற்கு தமிழ் மக்களுக்குரிய அபிவிருத்திகளில் பற்றாக்குறைதான் தொடரப் போகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு முதுகெலும்பிருந்தால் இந்த சட்டமூலத்தை ஆதரித்தமைக்காக தங்கள் பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும்' என்று அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .