2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

அதிபர் நியமனத்தில் உரிய நடைமுறை பின்பற்றப்படுவதில்லையென குற்றச்சாட்டு

Suganthini Ratnam   / 2016 மே 29 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் அதிபர்களுக்கான வெற்றிடங்கள் ஏற்படும்போது, உரிய காலத்தில் நடைமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகத் தேர்வின் மூலம் அதிபர்கள் தெரிவுசெய்யப்பட்டு நியமிக்கப்படுவதில்லை என அம்மாகாண தமிழ் ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பில் அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ஜெயராஜா இன்று ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில், 'அதிபர்களுக்கான  நியமனத்தின்போது, தொழிற்சங்கங்களின் அழுத்தங்கள் ஏற்படும் வேளையில் மட்டும் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. ஆனால், விண்ணப்பித்தவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. இதற்கு உதாரணமாக, திருகோணமலை உவர்மலை விவேகானந்தாக் கல்லூரிக்கு அதிபர் வெற்றிடத்துக்கு விண்ணப்பம் கோரப்பட்டு பல வருடங்கள் கழிந்தும், நேர்முகத்தேர்வு நடைபெறவில்லை' என்றார்.

'மேலும், சமகாலத்தில் திருகோணமலை மாவட்டத்தில் 10 க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் அதிபர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படும்போதும், திருகோணமலை வலயத்துக்கு உட்பட்ட 06 பாடசாலைகளுக்கு மாத்திரம் விண்ணப்பங்கள்; கோரப்பட்டுள்ளன. ஆனால், திருகோணமலை கல்வி வலயத்துக்கு உட்பட்ட கோபாலபுரம் தமிழ் மகா வித்தியாலயம், கும்புறுப்பிட்டி அரசினர் தமிழ்க்; கலவன் வித்தியாலயம், வெள்ளைமணல் அல் அஸார் முஸ்லிம் மகா வித்தியாலம், நாமகள் வித்தியாலயம், துவரங்காடு பாரதி வித்தியாலயம் இவற்றுடன் மூதூர் கல்வி வலயத்துக்கு உட்பட்ட சேனையூர் மத்திய கல்லூரி, ஆலங்கேணி விநாயகர் மகா வித்தியாலயம் ஆகியவை தற்காலிக அதிபர்களால் நிர்வகிக்கப்படுகின்றன.

ஏன் இப்பாடசாலைகளில் காணப்படும் அதிபர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள்; கோர முடியாதா? விண்ணப்பங்கள் கோர முடியாமைக்கு விசேட காரணங்கள் ஏதும் உண்டா என்பது தெரியவில்லை. 'கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் பின்வரும் குற்றச்சாட்டுகள் பலராலும் முன்வைக்கப்படுகின்றன. கோட்டக்கல்வி அதிகாரி, வலயக்கல்விப் பணிப்பாளர் மற்றும் மாகாணக் கல்வி அமைச்சு ஆகியோரின் செல்வாக்குக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுவதில்லை, உரிய முறையில் அதிபர் நியமனங்களை வழங்காமல் காலம் தாழ்த்துவது, தற்கால அதிபர்களின் சேவைக்காலத்தை அதிகரித்து சேவையில் நிரந்தரமாக அமர்த்த முயற்சித்தல், அதிகாரிகளின் உறவினர்களை குறித்த பாடசாலையில் வைத்திருப்பதற்காகவும் தற்காலிக அதிபர்களை பயன்படுத்துதல்

இவ்வாறான செயற்பாடுகளும் அதிகாரிகள் மற்றும்  அரசியல்வாதிகளின் தலையீடு போன்றவற்றால், இம்மாகாணத்தில் செயற்றிறன் மிக்க சிறந்த அதிபர்கள் நியமிக்கப்படுவதில்லை. இதனால்,  இப்பொழுது கிழக்கு மாகாணம் கல்விப் பெறுபேறுகளின் அடிப்படையில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. எனவே, இவ்வாறான செயற்பாடுகளை தங்களின் கவனத்துக்கு கொண்டுவருவதுடன், உரிய தீர்வைப் பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்' எனவும் அவர் மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X