2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

அந்தமானில் சிக்கியுள்ள இலங்கையர்கள் குறித்து வெளியான செய்தி

Freelancer   / 2023 ஏப்ரல் 12 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு - கல்குடா பிரதேசத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் இயந்திரக் கோளாறு காரணமாக கடலில் தத்தளித்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இலங்கை திரும்ப முடியாமல் அந்தமான் தீவுக் கூட்டங்களில்  தத்தளிக்கின்றார்கள். 

அவர்களை மீட்டெடுக்குமாறு சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட்டிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அந்தமான் தீவில் தத்தளிக்கும் கல்குடா மீனவர்கள் தொடர்பான விடயம் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

மீனவர்களான ஏ.எம். முஹாஜித் (வயது 34), எம்.எச்.எம். றிஸ்வி(வயது 35), பி.எம். இர்ஷாத்  (வயது 33) எம். அஸ்வர் (வயது 29) ஆகியோர்   மீன் பிடிக்கான அனுமதி பெற்றுக் கொண்டு கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 25ஆம் திகதி வாழைச்சேனையிலிருந்து வங்காளக் கடலுக்கு மீன்பிடிக்காக புறப்பட்டனர்.

எனினும், வழமையாக மீன் பிடியில் ஈடுபட்டு திரும்பும்   காலத்தையும் தாண்டி அவர்கள் கரை திரும்பாததால் நாம் அவர்களைத் தேடத் துவங்கினோம்.

அப்பொழுதுதான் அவர்கள் சென்ற படகின் இயந்திரம் செயலிழந்த நிலையில் அந்தமான் தீவில் சிக்கித் தத்தளிப்பது தெரியவந்தது.

இந்தியக் கரையோரக் காவல் துறையினர் அவர்களைக் காப்பாற்றி கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

இவ்விடயம் குறித்து இலங்கை கடற்றொழில் அமைச்சு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, இந்தியத் தூதரகம் உள்ளிட்ட இன்னும் பல இடங்களுக்கும் அறிவித்து அவர்களை மீட்டுத் தருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

ஆயினும், இப்பொழுது ஆறுமாதங்கள் கடந்துள்ள நிலையிலும் அவர்களை மீட்பதற்கான எந்த வித முயற்சிகளும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. எனவே, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சுற்றாடல் அமைச்சருமான தங்களிடம் இந்த விடயத்தைச் சமர்பிக்கின்றோம் என்று மக்கள் அமைச்சரிடம் குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர் நஸீர் அஹமட், 

இந்த விடயத்திற்கு முன்னுரிமை அளித்து அந்தமான் தீவில் சிக்கித் தவிக்கும் கல்குடா மீனவர்களை மீட்டெடுக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .