2025 மே 13, செவ்வாய்க்கிழமை

அனுமதி பெறப்பட்ட உணவகங்களில் உணவுகளை கொள்வனவு செய்யவும்

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 22 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரியின் எழுத்துமூல அனுமதி பெறப்பட்ட உணவகங்களில் உணவுகளை கொள்வனவு செய்யுமாறு பொதுமக்களை அவ்வைத்திய அதிகாரி யு.எல்.நசிர்தீன், இன்று திங்கட்கிழமை  கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வாறு அனுமதி பெறப்பட்ட சான்றிதழ்கள் உணவகங்களில் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிவித்தலில், 'சுகாதார மற்றும் விஞ்ஞான முறைப்படி நோக்குமிடத்து தத்தமது வீடுகளில் சமைக்கப்படும் உணவுகளே மிக மிகச் சிறந்ததாக இருப்பதால், வீடுகளில் உணவுகளைச் சமைத்து உட்கொள்ளும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும்.

உணவகங்களில் உணவுகளை கொள்வனவு செய்யும்போது, ஏற்கெனவே பயன்படுத்திய  சமையல் எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவா அல்லது புதிய எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவா என்பதை நிச்சயப்படுத்தவும். அத்துடன், அதிக சுவை ஏற்படுத்தும் இரசாயனப் பொருட்கள் அற்ற உணவாக உள்ளதையும் நிச்சயப்படுத்தவும்.

மேலும், உணவு உட்கொண்ட பின்னர் ஏதேனும் நோய் அறிகுறி தென்படின் உடனடியாக அரசாங்க வைத்தியசாலைகளை நாட வேண்டுமென்பதுடன், உட்கொள்ளப்பட்ட உணவின் எஞ்சிய மாதிரியை பகுப்பாய்வுக்காக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கையளிக்கப்பட வேண்டும்' என்றார்.

காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள உணவகமொன்றில்  கடந்த வெள்ளிக்கிழமை பகல்  புரியாணி உட்கொண்டபோது 82 பேர் சுகவீனமுற்றதைத் தொடர்ந்து, அப்புரியாணி உணவின் மாதிரியை மருத்துவ பரிசோதனைக்காக கொழும்பு பொரளையிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிலையத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை அனுப்பியதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

இதனுடைய முடிவு இன்னும் ஓரிரு தினங்களில் கிடைக்கும். இதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X