2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2016 ஜூன் 06 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு, கல்குடாக் கல்வி வலயத்துக்கு உட்பட்ட வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரியும் அவ்வித்தியாலய நிர்வாகத்தின் சீரின்மையைக் கண்டித்தும் அவ்வித்தியாலயத்தின் நுழைவாயில்க் கதவை மூடி நேற்றுத் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.  

பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பெற்றோர் பாதுகாவலர் சங்கம், பழைய மாணவர்கள் சங்கம், பொது அமைப்புகள் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

'ஆயிரம் பாடசாலைத் திட்டத்தில் உள்வாங்கப்பட்ட 1 ஏ பி தரத்தைக்; கொண்ட இவ்வித்தியாலயத்தில் சுமார் 2,000 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். ஐந்து ஊட்டப் பாடசாலைகளிலிருந்து உயர்தரத்துறைக்காக இவ்வித்தியாலயத்துக்கு மாணவர்கள் வருகின்றனர்.

இந்நிலையில்,  மேற்படி வித்தியாலயத்துக்கு 99 ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். தற்போது 62 ஆசிரியர்களே கடமையில் உள்ளனர். இந்த வருடம் இவ்வித்தியாலயத்திலிருந்து 12 ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளனர். இவர்களுக்கு பதிலீடாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள்  இதுவரையில் கடமையைப் பொறுப்பேற்கவில்லை' என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.  

'பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர்கள், பொது அமைப்புகளின் ஒன்றியம் ஆகியவற்றுக்குத்; தெரியாமல் பாடசாலை அபிவிருத்திச் சங்கக் கூட்டங்களை நடத்துதல், வெளிப்படைத் தன்மையற்ற கணக்கறிக்கை சமர்ப்பிப்பு மற்றும் ஆளுமை அற்ற தலைமைத்துவம் என்பன காரணமாக இவ்வித்தியாலய அதிபரையும் இடமாற்ற வேண்டும்' எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.

ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகைதந்த கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.துரைரெட்ணம், கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடினர். இதன்போது, ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது தொடர்பில் உரிய தரப்பினருடன் தாம் கலந்தாலோசிப்பதாகக் அவர்கள் கூறினர்.

எனினும், உடனடியாக ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் எனவும் இல்லையேல், தொடர் போராட்டங்கள் இடம்பெறும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.

இது தொடர்பில் கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜிடம் கேட்டபோது, 'இன்னும் 15 நாட்களுக்குள் இவ்வித்தியாலயத்துக்கு 12 ஆசிரியர்களை நியமிப்பதாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் உறுதியளித்துள்ளார். ஆகவே, மிக விரைவில் இவ்வித்தியாலயத்துக்கு பாடசாலைக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்;' என்றார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X