2025 மே 13, செவ்வாய்க்கிழமை

‘ஆசிரியர் இல்லாத பாடசாலைகளுக்கே ஆசிரியர் வேண்டும்’

Editorial   / 2017 ஒக்டோபர் 26 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம்  யாசீம், ஏ.எச்.ஏ. ஹுஸைன், வடிவேல் சக்திவேல், எப்.முபாரக், தீஷான் அஹமட்

“கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கான போட்டிப் பரீட்சை நிறைவு புள்ளிகளும் வெளியாகியுள்ள நிலையில்,  ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பகுதிப் பாடசாலைகளுக்கே, புதிய ஆசிரியர் நியமனத்தில் முன்னுரிமையளிக்கப்பட்டு, நியமனம் வழங்கப்பட வேண்டும்” என, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

தற்போது  கிழக்கின் பட்டதாரி  ஆசிரியர்களுக்கான  போட்டி பரீட்சையின் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே, இன்று (26) அவர் இதனைக் கூறினார்.

தொடர்ந்தும்  கருத்து  தெரிவித்த அவர்,

“கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறைகளை நிவர்த்திக்கும் வகையில்  பட்டதாரிகள் நியமனங்களை  முன்னெடுப்பதற்கான திட்டங்களை  நான்  முன்னர் வகுத்திருந்தேன்.

“கிழக்கு  மாகாணத்தின் கல்வித்துறையின் பின்னடைவுக்குப்  பிரதான காரணங்களில் ஒன்றாக ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதுடன், அதனை நிவர்த்திக்க உரிய ஆவணங்கள் மற்றும் தரவுகளை நாம் அரசாங்கத்துக்கு வழங்கி எமது  மாகாணத்தில் மேலும்  ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தேன்.

“இந்நிலையிலேயே, பட்டதாரிகளின் போராட்டமும் இடம்பெற்றது. அவர்களின் போராட்டம்  மூலமான அழுத்தமும் எமது தொடர்  முயற்சிக்கமைய அரசாங்கம் எமக்கு ,1700 பட்டதாரிகளை நியமிப்பதற்கான  அனுமதியை வழங்கியது.

“இதனடிப்படையில், கடந்த ஜூன்மாதம் 259 பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்களை வழங்கி வைத்தோம். ஏனைய 1,441 பேரை நியமிப்பதற்கான போட்டிப்பரீட்சை தற்போது நிறைவு பெற்றுள்ளது,

“இந்நிலையில், ஒரு  சில  கல்வி  வலயங்களுக்கு மாத்திரம் ஆசிரியர்கள் பகிர்ந்தளிக்கப்படுவதால், கிழக்கு  மாகாணத்தின் கல்வி நிலை வளர்ச்சியடையும்  என எண்ணுவது தவறாகும்.

“அத்துடன், உள் ளூராட்சி மன்றங்களின் தேர்தலுக்கான வேட்புமனு  கோரப்பட முன்னர் குறித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்களை ஆளுநர் வழங்க வேண்டும்.

“இல்லையெனில், போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த பட்டதாரிகள் மேலும் காத்திருக்க வேண்டிய நிலையே ஏற்படும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

“இதேவேளை,  தற்போது கிழக்கு  மாகாணத்தைச் சேர்ந்த  கல்வியியல் கல்லூரி ஆசிரியர்கள் வெளி மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

“கிழக்கு  மாகாணத்தில்  ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு,  தொடர் ஆர்ப்பாட்டங்கள்  முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கிழக்கு மாகாண ஆசிரியர்கள் வெளிமாகாணங்களுக்கு நியமிக்கப்படுவது,  கிழக்கு மாகாணத்தின் கல்விக்கு இழைக்கப்பட்டுள்ள பாரிய துரோகமாகும்.

“ஒரு சில  மாகாணங்களின் கல்வி நிலை மேம்பாடு முழு நாட்டினதும்  கல்வி வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்காது. மாறாக ஒட்டு மொத்த மாகாணங்களின் கல்வி வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் துணைபுரியும்.

“எனவே, கிழக்கு  மாகாணத்தின் கல்விநிலையை கருத்தில்கொண்டு அங்குள்ள ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் விதமாக கிழக்கு மாகாண ஆசிரியர்கள் கிழக்கு மாகாணத்துக்கே வழங்கப்பட வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X