2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இனவாதக் கண்ணோட்டத்துக்கு கடும் கண்டனம்

வா.கிருஸ்ணா   / 2018 மார்ச் 05 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்திலுள்ள சில அரசியல்வாதிகளும் அதிகாரிகளும், இனவாதக் கண்ணோட்டத்துடன் செயற்பட்டுவருவதை வன்மையாகக் கண்டிப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

அத்துடன், அட்டப்பள்ளம் பகுதியில், இந்து மயானக் காணி அபகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில், நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு நாளை (06) கொண்டுவரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சம்மாந்துறை பொலிஸாரால், கடந்த வெள்ளிக்கிழமையன்று, நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேச செயலகத்துக்குட்பட்ட அட்டப்பள்ளம் ஆலயத் தலைவர் உட்பட 21 பேரை, நேற்று (04) சிறைச்சாலைக்கு சென்ற வியாழேந்திரன் எம்.பி பார்வையிட்டார்.

அதனைத்தொடர்ந்து, சிறைச்சாலைக்கு முன்பாக ஊடகவியலாளர்களைச் சந்தித்து, தனது கருத்துகளைப் பதிவுசெய்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு ​மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

“கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் பூர்வீக குடியிருப்புக் காணிகள், வாழ்வாதார காணிகள், மயானக்காணிகள், மைதானக் காணிகள் அபரிக்கப்படுகின்ற, சூறையாடப்படுகின்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

“இவ்வாறான தொடர்ச்சியான நிகழ்ச்சி நிரலில், அம்பாறை மாவட்டத்தின் அட்டப்பள்ளம் என்னும் தமிழர்களின் பூர்வீக கிராமத்தில் உள்ள தமிழ் மக்களின் பூர்விகமான மயானக்காணி அபகரிக்கப்பட்டுள்ளது.

“அட்டப்பள்ளத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இது தமிழ் மக்களை உள்ளடக்கிய பூர்வீக கிராமமாகும். பரம்பரைபரம்பரையாக மயானபூமியாக பயன்படுத்தி வந்த 14 ஏக்கர் காணியை 2017ஆம் ஆண்டு சகோதர இனத்தை சேர்ந்த ஒருவர் அதற்குரிய ஆவணத்தை கொண்டுவந்து வேலியடைத்துள்ளார். அந்தவேளையில் 12 ஏக்கர் காணியை தமிழ் மக்கள் விட்டுக்கொடுத்துள்ளனர்.

“இரண்டு ஏக்கர் காணியை விட்டு ஏனையவற்றை அடைத்துள்ளார். அந்த காணியிலேயே, தமது இறந்த உறவுகளின் உடல்களை அடக்கம் செய்துவந்துள்ளனர். ஆனால், இன்று அதேநபர் மீண்டும் மிகுதியாகவுள்ள இரண்டு ஏக்கருக்கும் வேலியை அமைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

“தமது உறவுகள் அடக்கம்செய்யப்பட்ட கல்லறைகளையும் உள்ளடக்கியதாகவும் கல்லறைக்கு மேலாகவும் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.இதனை அவர்கள் மிகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

“ஆரம்பகாலத்திலிருந்துவரும் மயானக்காணிகள் நில அளவை செய்யப்படாத காரணத்தினால் சில இடங்களில் பிரதேசசபைகளில் பதிவுசெய்யப்படாத நிலையிருக்கின்றது. அதனை சாதகமாக வைத்துக்கொண்டு, கிழக்கு மாகாணத்தில் ஒரு சில அதிகாரிகள் தங்களது தேவைகளைப்பெற்றுக்கொள்வதற்காக தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை பட்டாபோட்டுக்கொடுக்கும் கேவலமான செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ளமுடியாது.

“அந்தவகையில், அட்டப்பள்ளத்தில் தமது மயானக்காணியை கேட்டு ஆர்ப்பாட்டம் செய்த மக்களை, சம்மாந்துறை பொலிஸார், பொலிஸ் நிலையம் வாருங்கள் உங்களை சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களுடன் சமாதானப்படுத்தப்போகின்றோம் என்று கூறி அழைத்துள்ளனர்.

“அங்கு 21 ஆண்களும் இரண்டு பெண்களும் சென்றவேளையில், அவர்களை அந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நான்கு மணி வரையில் வைத்திருந்து பின்னர் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளார்.

“அதன் பின்னர் அவர்கள் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆலய தலைவர் உட்பட 21 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

“நாங்கள் சட்டத்தினை மதிக்கின்றோம். ஆனால், பரம்பரையாக பயன்படுத்தப்பட்டுவந்த மயானக்காணியை அபகரிக்கமுற்பட்டவர்களை சரியான முறையில் விசாரணைசெய்து அதற்குரிய நடவடிக்கையினை எடுக்காமல் இனவாதக் கண்ணோட்டதுடனும் இனவாத சிந்தனையுடனும் செயற்பட்டுள்ள அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் வன்மையாக கண்டிக்கின்றோம்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .