2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

’உரிய காலத்தில் உரம் கிடைக்கும்’

Freelancer   / 2025 செப்டெம்பர் 24 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

“தேயிலைப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தாமதமின்றி  உரிய காலத்தில் தட்டுப்பாடில்லாமல்  உரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் தேயிலை சபை மூலம் அதற்காக 2000 மில்லியன் ரூபாய் நிதி  ஒதுக்கப்பட்டுள்ளது.உரமானியத்தை கியூ  ஆர் கோட் மூலம் பெற்றுக் கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது” என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

 பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் அஜந்த கம்மெத்தகே எம்.பி. எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த  அவர் மேலும் கூறுகையில்

“பெருந்தோட்ட கைத்தொழில் துறையில் தேயிலைப் பயிர்ச் செய்கை அண்மைக் காலமாக வீழ்ச்சியடைந்தது. முக்கியமாக உரம் தொடர்பான பிரச்சினையே அதற்கு காரணமாகியது.கடந்த காலங்களில் உரம் இல்லாத காரணத்தினால் முழுமையான விவசாயத் துறையும் பெரும் வீழ்ச்சிக்குள்ளானது. மேற்கொண்ட தீர்மானங்கள் உரத்தை இல்லாமல் செய்ததால் பெரும் நெருக்கடியை எதிர் நோக்க நேர்ந்தது. அந்த வகையில் தேயிலைப் பயிர்ச் செய்கையும் வீழ்ச்சியடைந்ததுடன் கடந்த வருடத்தில் அதற்காக நாம் உரம் வழங்கினோம்.

அதன் போது ஒரு நிறுவனத்தின் மூலம் மட்டுமே உரம் விநியோகிக்கப்படுவதாகவும் உரம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும் மக்கள் மத்தியிலிருந்து பிரச்சனைகள் எழுந்தன. ஏனைய நிறுவனங்களிடமிருந்து உரத்தை பெற்றுக் கொள்வது தொடர்பிலும் சில தரப்பினர் யோசனைகளை முன் வைத்தனர்.

அதனையடுத்து அனைத்து யோசனைகளையும் கவனத்திற் கொண்டு  உரம் விநியோகிப்பதில் புதிய முறைமை ஒன்றை உருவாக்குவதற்காக நாம் அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றுக் கொண்டோம்.அத்துடன் தேயிலை சபை மூலம் 2000 மில்லியன் ரூபாவை 2025 ஆம் ஆண்டுக்கான உர நிவாரணத்துக்காக ஒதுக்கியுள்ளோம்.

நாட்டில் நூற்றுக்கு 75 வீதமான தேயிலை சிறு தேயிலைத் தோட்ட பயிர்ச் செய்கை மூலமாகவே பெற்றுக் கொள்ளப்படுகிறது. அந்த பயிர்ச்செய்கைகளை இலக்காகக் கொண்டு தேயிலை உரமானியத்தை வழங்குவதற்கு தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .