2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தற்போதாவது ஏற்றுக்கொள்வீர்களா?

Freelancer   / 2025 செப்டெம்பர் 24 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதி அமைச்சர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டு, பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு   எதிரான  நம்பிக்கையில்லா பிரேரணையை நிராகரித்தீர்கள். ஆனால், இவர் தற்போது பாதுகாப்பு பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, நாங்கள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணை சரியானது என்பதை தற்போதாவது  ஏற்றுக்கொள்வீர்களா?  என்று  எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக  எம்.பி. சபாநாயகரிடம் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை (23) அன்று விசேட கூற்றை முன்வைத்தே இவ்வாறு கேள்வியெழுப்பினார். 

மேலும் அவர் பேசுகையில், உத்தியோகபூர்வ அரசுமுறை விஜயத்தை மேற்கொண்டு  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அமெரிக்கா சென்றுள்ளார்.ஜனாதிபதி வசமுள்ள மூன்று அமைச்சுகளுக்குப் பதில் அமைச்சர்கள்  நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.

பொருள்கோடல் கட்டளைச் சட்டத்தின் 2(அ) பிரிவில் 'அமைச்சர் ஒருவர் அரசாங்கத்தின் ஏதேனும் கடமை அல்லது கருமத்தை ஆற்றும் போது  அவருக்கு ஜனாதிபதியால் அந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று கருதப்படும். முறையாக வகையில் குறித்த நபர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று கருதப்படும்'  என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயத்தைத் தொடர்ந்து பிரதி  பாதுகாப்பு  அமைச்சர் அருண ஜயசேகர பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அருண ஜயசேகரவுக்கு எதிராக நாங்கள் நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வந்தபோது,  பிரதி அமைச்சர்களுக்கு விடயதானத்தின் ஊடாக அதிகாரம் மற்றும் தத்துவங்கள் அளிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டு  நீங்கள்  நம்பிக்கையில்லா பிரேரணையை நிராகரித்தீர்கள்.

தனிப்பட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக நாங்கள் நம்பிக்கையில்லாப்  பிரேரணையைக் கொண்டு வரவில்லை. எனவே,  எமது நம்பிக்கையில்லா பிரேரணை சரியானது என்பதை தற்போதாவது ஏற்றுக்கொள்வீர்களா என்று கேள்வியெழுப்பினார்.

இதற்கு  சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன பதிலளிக்கையில், , இவ்விடயம் குறித்து நான் கடந்த பாராளுமன்ற அலுவல்கள் கூட்டத்தின் பின்னர் உங்களுக்குத் தெளிவுபடுத்தினேன். எதிர்வரும் நாட்களில் பேசலாம்.இவ்விடயம் குறித்து விரிவாகத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது என்றார்.

இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதமாச  பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர மீது எமக்கு தனிப்பட்ட பிரச்சினைகள் ஏதுமில்லை. பதில் பாதுகாப்பு அமைச்சராக இன்று (நேற்று) அவர் நியமிக்கப்பட்டுள்ளார். நம்பிக்கையில்லா பிரேரணையைப்  புறக்கணிப்பதற்கு அடிப்படையாக அமைந்த விடயங்களைச் சபையில் வெளிப்படுத்துங்கள் என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .