2025 மே 12, திங்கட்கிழமை

உணவின்றி உயிர் வாழ முடியாது: முர்ஷிதா ஷிரீன்

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

எத்தனை நவீன தொடர்பாடல் தொழில்நுட்பங்களில் நாம் முன்னேறினாலும், உணவு உற்பத்தியின்றி இந்த உலகில் மனிதர்களோ, விலங்குகளோ உயிர் வாழ முடியாது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என ஏறாவூர் பெரும்பாக விவசாயப் போதனாசிரியை எம்.எச்.முர்ஷிதா ஷிரீன் தெரிவித்தார்.

தேசிய உணவு உற்பத்தி ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஏறாவூர் மிச் நகர் பிரதேச விவசாயிகளுக்கு விவசாய விழிப்புணர்வு நிகழ்வு  இன்று செவ்வாய்க்கிழமை அக்கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில்  இடம்பெற்றது. இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எம்.எச்.எம்.அஸீம் உட்பட மிச் நகர் கிராம வீட்டுத் தோட்டச் செய்கையாளர்கள் 30 பேர் கலந்து கொண்டனர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'எமக்குத் தேவையான மரக்கறிகளையும் கிழங்குகளையும் கனி வர்க்கங்களையும் எமது வீட்டுச் சூழலில் நாமே உற்பத்தி செய்துகொள்ள முடியும். அதற்கு நிலப் பற்றாக்குறை ஒரு காரணமாக இருக்கப் போவதில்லை.

நவீன தொழில்நுட்பத்தின் கண்டுபிடிப்புக்களினால் வீட்டுத் தோட்டம் செய்வது இப்பொழுது முன்னரை விட இன்னும் இலகுவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ளாது பெருநிலப் பரப்புக்களில் இரசாயனம் கலந்து மேற்கொள்ளப்படுகின்ற விவசாய உணவுகளை அதிக விலை கொடுத்து வாங்கி உண்ணும் பழக்கமுடையவர்களாக நாம் மாறிவிட்டோம்.

அதன் மூலம் எமது உடலாரோக்கியம் நஞ்சு கலந்த விவசாய உற்பத்திப் பொருட்களை உண்பதால் கெட்டுப் போய் நோயாளியாகி விடுகின்றோம்.

இப்பொழுது எம்மில் குழந்தைகள் தொடக்கம் வளர்ந்தோர் வரை அநேகம் பேருக்கு ஏதோவொரு உடல் உபாதை இருக்கிறது. இந்த ஆரோக்கியக் கெடுதல் இல்லாமல் நாம் சுகதேகியாக வாழ்வதென்றால் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு அந்த உணவுகளை உண்ண வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் ஆரோக்கியமும் ஆயுளும் நீடிப்பதோடு, பொருளாதாரத்தையும் மீதப்படுத்தி இயற்கையையும் அதன் பசுமை குன்றாமல் பாதுகாக்கலாம்' என்றார்.

தேசிய மட்டத்தில் உணவு உற்பத்தித் தன்னிறைவு, இறக்குமதி செலவை மீதப்படுத்தல், சூழல் நேயம் மிக்க உணவு உற்பத்தி, காலநிலைக்குப் பொருத்தமான பயிரிடல், பாடசாலை பாதுகாப்புத் தரப்பு பொதுமக்கள் இணைந்த விழிப்புணர்வு வேலைத்திட்டம், ஆரோக்கியமான சமுதாயம் என்ற எட்டு வகையான குறிக்கோள்களுடன் தேசிய உணவு உற்பத்தி ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டம் அமுலாகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X