2026 மே 12, செவ்வாய்க்கிழமை

“உரம் வழங்க தவறினால் வீதிக்கு இறங்குவோம்”

Janu   / 2026 மே 12 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

"மட்டக்களப்பு மாவட்டத்திற்கான உரத்தினை உடனடியாக பெற்றுத்தரனும் என்ற எமது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டால், விவசாயிகளுடன் இணைந்து நாங்களும் வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை," என மட்டக்களப்பு மாவட்ட விவசாய அமைப்புகளின் அதிகார சபை தலைவர் சந்திரசேகரன் சந்திரமோகன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் செவ்வாய்க்கிழமை (12)  நடைபெற்ற ஊடக சந்திப்பில், கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். தனியார் நிறுவனங்கள் ஊடாக விவசாயிகளுக்கு உரம் விநியோகம் செய்வதற்கு அரசாங்கம் நிதி வழங்கியுள்ள போதிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் அதனை விநியோகிப்பதில் திட்டமிட்ட இழுத்தடிப்புகள் செய்யப்படுவதாக இதன்போது குற்றம் சுமத்தப்பட்டது.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

"மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபோக நெற்பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டு தற்போது 50 நாட்களை கடந்துவிட்டது. இவ்வளவு காலம் கடந்தும், சில கமலநல சேவை நிலையங்களுக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு இன்னும் உர விநியோகம் நடைபெறாமல் இருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது.

வாகரை மற்றும் ஏறாவூர் கமலநல சேவை நிலையங்களுக்குத் தனியார் நிறுவனங்கள் மூலம் உர விநியோகம் நடைபெற வேண்டும் என அரசாங்கம் தீர்மானித்திருந்தது. அதற்காக  கடந்த ஏப்ரல் மாதமே பணம் வைப்பிலிடப்பட்டு ஒரு மாதம் கடந்துவிட்டது. நாம் ஒவ்வொரு நாளும் கமலநல அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் தேசிய உர செயலகம் ஆகியவற்றுடன் தொடர்புகொண்டு பேசும்போது, 'நாளை வரும், நாளை வரும்' என்று கூறி விவசாயிகளை ஏமாற்றி வருகின்றார்கள்.  

உரத்தை ஏற்றிவருவதற்காக தனியார் நிறுவனத்திற்கு மூன்று லொறிகள் அனுப்பப்பட்டன. அதில் ஒரு லொறியில் உரம் ஏற்றப்பட்ட நிலையில், பிற்பகலில் அந்த லொறியை  தடுத்து நிறுத்திய உர நிறுவனம், அதன் சாவியை பறித்துக்கொண்டு உரம் வருவதை தடை செய்துள்ளது. இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள், தேசிய உர செயலகம் மற்றும் கமலநல அபிவிருத்தி திணைக்கள பிரதியாணையாளர் ஆகியோருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து, நள்ளிரவில் ஒரு லொறி மாத்திரம் விடுவிக்கப்பட்டதாக அறிகின்றோம்.

வாகரை மற்றும் ஏறாவூர் நிலையங்களுக்கு வழங்க வேண்டிய 327 மெட்ரிக் டொன் உரத்திற்கு பதிலாக, வெறும் 40 மெட்ரிக் டன் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. பயிர் விதைத்து 50 நாட்கள் கடந்த நிலையில் உரம் மறுக்கப்படுவது, 'பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மறுக்கப்பட்டதற்கு' ஒப்பானது. இவ்வாறான நிறுவனங்களை அரசாங்கம் உடனடியாக இழுத்து மூட வேண்டும்.

அரச கூட்டுத்தாபனம் வழங்க வேண்டிய 853 மெட்ரிக் தொன்னில் 697 மெட்ரிக் தொன்னை வழங்கியுள்ளது. மீதமுள்ள 156 மெட்ரிக் டொன் கிடைக்க வேண்டியுள்ளது. ஆனால், தனியார் நிறுவனங்கள் வழங்க வேண்டிய 2,977 மெட்ரிக் டொன்னில் 2,047.5 மெட்ரிக் டொன் மாத்திரமே கிடைத்துள்ளது. இன்னும் 929 மெட்ரிக் டொன் நிலுவையில் உள்ளது

வரும் 20ஆம் திகதி ஜனாதிபதி மட்டக்களப்புக்கு வருகை தரவுள்ளதாக அறிகின்றோம். அவரிடம் எமது இந்தக் கோரிக்கை நேரடியாக சென்றடைய வேண்டும். அத்துடன், ஏக்கர் ஒன்றுக்கு வழங்கப்படும் உரத்தின் அளவை ஆகக்குறைந்தது 100 கிலோவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டீசல், விதைநெல் மற்றும் கிருமிநாசினிகளின் விலையேற்றத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அறுவடை செய்யப்படும் நாட்டு நெல்லுக்கு ஒரு கிலோவிற்கு ஆகக்குறைந்தது 150 ரூபாய் விலையை உறுதிப்படுத்த வேண்டும். இல்லையெனில், எதிர்காலத்தில் விவசாயத்தைக் கைவிட வேண்டிய நிலை ஏற்படும். ஜனாதிபதி உடனடியாகத் தலையிட்டு எமது மாவட்டத்திற்கான உரத்தை  பெற்றுத்தர வேண்டும்," என அவர் வலியுறுத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .