2025 மே 20, செவ்வாய்க்கிழமை

’எமது உறவுகள் எமக்கு வேண்டும்’: ஜனாதிபதியிடம் வேண்டுகோள்

Editorial   / 2017 நவம்பர் 17 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

எமது உறவுகளைத் தேடி, நாம் அஹிம்சை வழியில் மேற்கொள்ளும் போராட்டங்கள், அரச புலனாய்வுத் துறையினரால் கண்காணிக்கப்படுவதானது இன்னும் தொடர்கின்றது. இச்செயற்பாடானது பாதிக்கப்பட்ட தரப்பினரை மேலும் பாதிப்படைய செய்வதாகும்' என, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், இன்று வியாழக்கிழமை (16) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

வடக்கு கிழக்கைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், நேற்று (16) கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போதே, இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக, மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பாக கலந்துகொண்ட அவ்வமைப்பின் ஏற்பாட்டாளர் அ.அமலநாயகி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

'வன்கைதுகள் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் ஆகியவற்றுக்கு தகுந்த ஆதாரங்கள் காணப்பட்ட போதும் விசாரணைகள் தாமதமாவது ஏன்? விசேட விசாரணை குழுக்கள் கடந்த காலத்தில் அமைக்கப்பட்ட போதும் அவர்களது விசாரணை பக்கச்சார்பாக காணப்பட்டமை நீதி தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது.

'2000ஆம் ஆண்டு தொடக்கம் 2009 வரையான காலப்பகுதியில், 600க்கும் மேற்பட்ட எமது உறவுகள், வீடுகளில் உணவருந்தி கொண்டிருந்தபோதும், வயல் மற்றும் தொழில் செய்யும் இடங்களிலும் ஏன் வீதியில் பயணம் செய்யும் போதும், மனைவி, பிள்ளைகள், தாய், தகப்பன், நண்பர், உறவினர் முன்னிலையில் இழுத்துச் செல்லப்பட்டனர். இவர்கள், ஆயுதக்குழுவுடன் எவ்வித தொடர்புமற்றவர்களாவர்.

'எனவே, எமது உறவுகளின் இன்றைய நிலை தொடர்பான உண்மையானதும் நீதியானதும் விரைவானதுமான விசாரணை மேற்கொள்ளப்பட்டு, எமக்கு தகவலும் நீதியும் வழங்கப்பட வேண்டும். எமது உறவுகள் எம்முடன் இணைக்கப்பட வேண்டும்.

'மாறாக கடந்த காலங்களில், தமிழ் மக்களுக்கு எதிராக துணைப்படையுனருடன் இணைந்து இலங்கை அதிரடிப்படையினர், இராணுவத்தினர், புலனாய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட வன்செயல்களுக்குக்கான நீதி, இதுவரை கிடைக்காத நிலையில், அண்மையில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் தொடர்பான நீதி எமக்கு வழங்கப்படுமா? என்கின்ற கேள்வி எமக்குள் எழுகின்றது.  

'அத்துடன், கடந்த காலத்தில் நடைபெற்ற பின்வரும் சம்பவங்கள் தொடர்பாகவும் கருத்திலெடுக்கப்பட வேண்டியதும் அவசியமாகும்.

1.    1990.08.09ஆம் திகதி அன்று புனானை மயிலம்கரச்சி என்னும் பகுதியில் 39பேர் காணாமல் ஆக்கப்பட்டனர்.

2.    1990.02.08ஆம் திகதி மூன்று தடவைகள் சுற்றிவழைப்பு மேற்கொள்ளப்பட்டு சித்தாண்டி முருகன் கோவிலில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வாழ்ந்து வந்த 89 ஆண்கள் இராணுவத்தினரால் கைது செய்ப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர்.

3.    1990.09.09ஆம் திகதி சத்துருக்கொண்டானில் சிறுவர்கள், பெண்கள், கற்பிணித்தாய்மார், முதியோர், வலதுகுறைந்தோர், ஆண்கள், யுவதிகள் 186பேர் இராணுவத்தினரால் சுற்றிவழைப்பில் கைதுசெய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டனர்.

4.    1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் வாகரையில் 11பேர் காணாமல் செய்யப்பட்டனர்.

5.    1990.09.20ஆம் திகதி சவுக்கடியில் 67பேர் இராணுவத்தினரால் சுற்றுவளைப்பு மேற்கொள்ளப்பட்டு அவர்கள் அழைத்து செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர்.

1990.09.05 அன்று, கிழக்கு பல்கலைக்கழகத்தில் அகதிகளாக இடம்பெயர்ந்து தஞ்சம் புகுந்திருந்த மக்களைச் சுற்றிவளைத்து, அதில் குறிப்பாக 158 இளம் வயது ஆண்களை வற்புறுத்தலில் கைதி செய்து கொண்டு சென்றனர்;.  மேற்கூறப்பட்டவை சில உதாரணங்களே ஆகும்.

இக்காலப்பகுதியில் பின்வரும் பெயர்களை கொண்ட இராணுவத்தினர் பொறுப்பதிகாரியாக செயற்பட்டனர். கெப்டன் முனாஸ், கெப்டன் பாலித்த, கெப்டன் குணரெட்ன, மேஜர் மாஜித் ஆகியோராவர். மட்டக்களப்பு மாவட்டத்துக்கு பொறுப்பாகக் காணப்பட்டவர் ஜெரின்ட சில்வா என்பவராவார்.

'1978ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு காலப்பகுதி வரை தொடர்ச்சியாக யுத்தத்தினை காரணமாக கொண்டு 600இற்கு மேற்பட்டோர் கடத்தல், படுகொலை செய்யப்படுதல், அச்சுறுத்தல்கள், அத்துமீறல்கள் போன்ற பல சம்வங்கள், வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களை பாதிக்கும் விதத்தில் நடைபெற்றபோதும், இச்சம்பவங்கள் தொடர்பான முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.

'இச்சம்பவங்களால் பெண்கள், சிறுவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன்  பாதுகாப்பு, பொருளாதாரம் கல்வி ரீதியான சவால்கள்களுக்கு முகம்கொடுக்கின்றனர்.
'நாங்கள் பலதடவைகள் குரல் கொடுத்திருந்தபோதும், யாரும் நாங்கள் எதிர்பார்க்கும் நீதியனையோ தங்களால் வழங்கப்பட்ட வாக்குறிதியினையோ இதுவரை காலமும் நிறைவேற்றவில்லை என்பதனை வேதனையுடன் சுட்டிக்காட்டுகின்றோம்.  

'ஆயினும் இனத்துவ ஒருமையை விரும்புவதாக தெரிவிக்கும் தாங்களது நல்லாட்சியில் இனிமேலும் பாகுபாடுகளை நாம் உணராதவாறு தங்களது உற்ற உறவாக எம்மை கருதி காலதாமதமின்றி எமக்கான நீதி கிடைக்க உதவுவீர்கள் என நம்புகின்றோம். எமது உறவுகள் எமக்கு வேண்டும்' என, அவர் மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X