2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

காத்தான்குடியில் 30 பாடசாலைகளில் தளபாடப் பற்றாக்குறை

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் அமைந்துள்ள 30 பாடசாலைகளில் தளபாடப் பற்றாக்குறை காணப்படும் அதேவேளை, 45 ஆசிரியர்கள் மேலும் தேவையாக உள்ளதாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.பதூர்தீன் தெரிவித்தார்.

இக்கல்விக் கோட்டத்தில் நீண்டகாலமாக நிலவும் ஆசிரியர்கள் மற்றும் தளபாடங்கள், இடப்பற்றாக்குறை தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டிடம் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் நேற்று புதன்கிழமை அவர் கூறினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 'இக்கோட்டத்தில் 14,350 மாணவர்கள் கற்கின்றனர்;. 656 ஆசிரியர்கள் கடமையிலுள்ளனர். இருப்பினும், 45 ஆசிரியர்கள் மேலும் தேவைப்படுகின்றனர்' என்றார்.

'மேலும், உடைந்த தளபாடங்கள் திருத்தப்படாமலுள்ளன. இத்தளபாடங்களை திருத்தி பாவித்தால்; தளபாடப் பற்றாக்குறையை ஓரளவுக்கு நிவர்த்திக்கலாம். இருப்பினும், தளபாடங்களை திருத்துவதற்கு பாடசாலைகள் மட்டத்தில் போதிய நிதி இல்லை. வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள பெற்றோரிடமும் நிதியுதவியைக் கேட்கமுடியாது.

தளபாடங்களை திருத்துவதற்கு சுமார் 10 இலட்சம் ரூபாய் தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிதியை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஒதுக்கித் தந்தால் உடைந்த தளபாடங்களை திருத்தி 2016ஆம் ஆண்டு ஜனவரியில் தளபாடப் பற்றாக்குறையை நீக்கலாம்' எனவும் அவர் தெரிவித்தார்.  

'ஆரம்பக்கல்வி ஆசிரியர் பற்றாக்குறை சகல சிறிய பாடசாலைகளிலும் உள்ளன. பொதுவான நியமனத்தின் அடிப்படையில் நியமனங்கள், இடமாற்றங்களை வழங்கினால் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கலாம். தேசிய பாடசாலைகளில் ஆசிரியர்கள் மேலதிகமாக உள்ளனர். மாகாணப் பாடசாலைகளிலிருந்து தேசிய பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை விடுவிப்பதுபோன்று, தேசிய பாடசாலைகளிலிருந்தும் மேலதிகமாகவுள்ள ஆசிரியர்களை மாகாணப் பாடசாலைகளுக்கு விடுவிக்கும் ஏற்பாடுகளை மாகாண கல்விப் பணிப்பாளர் செய்துதர வேண்டும்.

காத்தான்குடி அஷ்ஷுஹதா வித்தியாலயம், ஜாமிழ்ழாபிரீன் வித்தியாலயம், மில்லத் மகளிர் மகா வித்தியாலயம், பாத்திமா பாலிகா வித்தியாலயம், அந்நாஸர் வித்தியாலயத்தின் மேல்மாடி, ஹிழ்றியா வித்தியாலயம், பாலமுனை அஷ்ஹர் வித்தியாலயம், பூநொச்சிமுனை இக்றஹ் வித்தியாலயம் ஆகியவற்றில் கட்டட நிர்மாணப்பணி பூர்த்தியாகமலுள்ளது. இப்பாடசாலைக் கட்டடங்களுக்கு கூரைகளை அமைத்து வகுப்புகளை  நடத்தும் ஏற்பாடுகளை செய்தால் இடநெருக்கடியை தீர்க்கமுடியும்' எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X