2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

கிழக்குப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்

Princiya Dixci   / 2016 ஜூன் 09 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கல்வி நடவடிக்கைகள் இன்று வியாழக்கிழமை (09) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம் தெரிவித்தார்.

தமிழ் மற்றும் சிங்கள மாணவர்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டதையடுத்து ஏட்டிக்குப் போட்டியான இரண்டு ஆர்ப்பாட்டங்கள் கடந்த மாதம் 26ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் இடம்பெற்றன.

தமிழ் மாணவர்களினால் வந்தாறுமுலை வளாகத்தில் கடந்த மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்கால் தினம் நினைவு கூரப்பட்டது.

இந்நிகழ்வு தொடர்பான படங்களை, தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்திருந்த தமிழ் மாணவன் மீது, சிலர் தாக்குதல் நடத்தியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்கள் மீது, நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி தமிழ் மாணவர்கள்   வளாகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இத்தாக்குதல் தொடர்பாக இரு சிங்கள மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகத்தினால் கடந்த மாதம் 27ஆம் திகதி முதல் விரிவுரைகளில் பங்கெடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது.

இந்தத் தடையை நீக்கக் கோரி, அன்றைய தினமே, வளாகத்தின் பிரதான வாயிலை மூடி சிங்கள மாணவர்கள் ஆர்ப்பாட்டம்  செய்தனர்.

இந்த ஆர்பாட்டம் காரணமாக சுமார் 03 மணித்தியாலங்கள்  விரிவுரையாளர்கள் உட்பட எவரும் வளாகத்துக்குள்ளிருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

இதன் பின்னர் இடைநிறுத்தப்பட்ட கல்வி நடவடிக்கைகள், இன்று (09) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தாக்குதலை மேற்கொண்டதாகச் சந்தேகிக்கப்படும் இரு சிங்கள மாணவர்கள் மீதான ஒழுக்காற்று விசாரணை தொடர்ந்து இடம்பெறுகின்றது.

அத்துடன், மாணவர்களின் பதில் அறிக்கையும் கோரப்பட்டுள்ளது எனத் தெரிவித்த பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி ஜயசிங்கம், விசாரணைகள் முடிவும் வரை அம்மாணவர்களுக்கான வகுப்புத் தடை நீடிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X