2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

’சகோதரத்துவம் ஏற்பட்டால் இணைப்புக்கு ஆதரவு’

Editorial   / 2018 ஜூன் 28 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, கே.எல்.ரி.யுதாஜித்

தமிழ் - முஸ்லிம் மக்களிடையே புரிந்துணர்வும் ஒருமைப்பாடும் சகோதரத்துவமும் ஏற்படும் போது, வடக்கு - கிழக்கு இணைப்புக்கு, எவ்விதத் தயக்கமும் இல்லாமல் ஆதரவு வழங்கவுள்ளதாக, தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க மற்றும் அரசகரும மொழிகள் பிரதியமைச்சர் அலிசாகீர் மௌலானா தெரிவித்தார்.

அனைத்து இன மக்களும் சமாதானத்துடனும் சகவாழ்வுடனும் வாழமுடியும் என்ற மன நிலையை வடக்கிலும் கிழக்கிலும் உருவாக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

புதிய அரசமைப்புச் சீர்திருத்தம் மீதான மக்கள் கலந்துரையாடலும், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொது அமைப்புகள், சிவில் அமைப்புகள், சமூகச் செயற்பாட்டாளர்களைச் அறிவுறுத்தும் நிகழ்வும், மட்டக்களப்பு - சத்துருக்கொண்டானிலுள்ள சர்வோதயம் நிலையத்தில், நேற்று முன்தினம் (26) காலை முதல் மாலை வரை நடைபெற்றது. சர்வோதயம், தேசோதயம் அமைப்பு ஆகியன இணைந்து, இவற்றை நடத்தின.

இதன்போது, இலங்கையின் அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தும் குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை தொடர்பில், கலந்துகொண்டவர்களுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அலிசாகீர் மௌலானா, “ஜனாதிபதியுடன் உள்ள நாங்கள், அனைத்து மக்கள் மத்தியிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும், அபிவிருத்திகளை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில், மக்கள் பிரதிநிதிகளாக அமைச்சர்களாக இருந்து செயற்படமுடியும்.

“ஆனால், இந்த நல்லிணக்கம் மூலம் பெறப்படும் அதிகாரங்களை, நாங்கள் எவ்வாறு பெறப்போகின்றோம் என்பது கேள்வியாகவே இருக்கின்றது.

“இன்று, தமிழ்பேசும் மக்கள் மத்தியில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. தமிழ் பேசும் மக்களுக்குள் நல்ல அபிப்பிராயங்கள் ஏற்படுமானால், வடக்கும் கிழக்கும் இணைந்திருப்பதில், எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை" என்று குறிப்பிட்டார்.

இரு இனங்களும் இணைந்து செயற்பட்டு, ஆட்சியுரிமையைப் பெறுவதற்கு, சர்வதேச அழுத்தம் தேவையில்லை என்று குறிப்பிட்ட அவர், உண்மையான எண்ணத்துடன், உண்மையான சகோதர வாஞ்சையுடன் இணைந்து வாழ்ந்தாலே போதுமானது என்றும் குறிப்பிட்டார்.

“அவ்வாறான நிலையேற்படுமானால், வடக்கு - கிழக்கில் இணைந்து வாழ்வதற்கு நாங்கள் தயார் என்று நான், அச்சமில்லாமல் உரக்கக் குரல்கொடுப்பேன். அவ்வாறான ஒரு மனநிலையை நாங்கள் உருவாக்கவேண்டும்” என்று மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், தேசோதயம் அமைப்பின் தலைவர் கலாநிதி சஞ்சய நாணயக்கார, சர்வோதய கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.ரி.எம்.ஹரீம், பேராதனைப் பல்கலைக்கழக அரசியல்துறை விரிவுரையாளர் சரீபுதீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X