2025 மே 23, வெள்ளிக்கிழமை

சத்துருக்கொண்டான் படுகொலை 27ஆவது ஆண்டு நினைவேந்தல்

பேரின்பராஜா சபேஷ்   / 2017 செப்டெம்பர் 11 , மு.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


மட்டக்களப்பு, சத்துருக்கொண்டானில் 186 தமிழர்கள் படுகொலையின் 27 ஆவது ஆண்டு நினைவேந்தல் சனிக்கிழமை (09) மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

 

1990 ஆம் ஆண்டு, புரட்டாதி மாதம் ஒன்பதாம் திகதி சத்துருக்கொண்டான், பனிச்சையடி, கொக்குவில் மற்றும் பிள்ளையாரடி பகுதிகளைச் சேர்ந்த 186 தமிழர்கள், பாதுகாப்புத் படையினரால் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் நடைபெற்று 27 ஆண்டுகள் கடந்த நிலையில் அவர்களது உறவினர்களினால் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.   

கொக்குவில் அரச மரத்தடிப் பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பான பேரணி, சத்துருக்கொண்டான் தூபியில் முடிவடைந்தது. அங்கு நினைவுத் தூபிக்கு மலர்தூவி, விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் இரங்கல் கூட்டமும் நடைபெற்றது.  

நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ச.வியாழேந்திரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், பிரதித் தவிசாளர் நி.இந்திரகுமார், உறுப்பினர்களான கோ.கருணாகரம் (ஜனா), மா.நடராசா மற்றும் உறவுகளை இழந்த குடும்ப உறவினார்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.  

09.09.1990 அன்று, இராணுவம், சத்துருக்கொண்டான், பனிச்சையடி, கொக்குவில், பிள்ளையாரடி போன்ற கிராமங்களைச் சுற்றிவழைத்து, அங்கிருந்த 186 தமிழ் மக்களை விசாரணைக்கென அழைத்துச் சென்றது. இவர்களில் பெண்கள், குழந்தைகள், கற்பிணிப் பெண்கள், சிசுக்கள், முதியவர்கள் மற்றும் இளைஞர்களும் அடங்கியிருந்தனர்.   

இவர்கள் அனைவரும் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக அப்பிரதேச மக்கள் கூறுகின்றனர். இதில் ஒருவர் மாத்திரம் பலத்த காயங்களுடன் உயிர்தப்பி, ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார்.  

கிராமத்திலிருந்து அழைத்துச் செல்லபட்ட சிறிது நேரத்தில், அழுகுரல்கள் மற்றும் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாகவும் பின்பு, அப்பிரதேசத்தில் புகைமண்டலம் தெரிந்ததுடன் பிணவாடை வீசியதாகவும் வீடுகளின் மறைந்திருந்து உயிர்தப்பியவர்கள் தெரிவிக்கின்றனர்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X