2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

’ஜனாசாக்களை எரித்து எம்மை நோகடிக்காதீர்கள்’

Princiya Dixci   / 2020 நவம்பர் 25 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணித்த முஸ்லிம்களின் ஜனாசாக்கள் எரிக்கப்படுவதனால்  முஸ்லிம் சமூகம் பெரும் வேதனையில் வாழ்வதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் வரவு - செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் நேற்று (24) உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

“முஸ்லிம்கள் தற்போது மிகவும் வேதனையான ஒரு காலகட்டத்தில் வாழ்கின்றார்கள். கொரோனாவில் பாதிக்கப்பட்டு மரணித்த முஸ்லிம்களின் ஜனாசாக்கள் எரிக்கப்படுவது எங்களுக்கு பெரும் வேதனையைத் தருகின்றது. 

“பிறந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் இறப்பு இருக்கின்றது. இஸ்லாமியர்களாகிய நாம் அடக்கம் செய்வதையே கட்டாயக் கடமையாகக் கொண்டவர்கள். அந்த வகையில், எங்கள் கோரிக்கைக்கு செவி சாய்ப்பது இந்த அரசாங்கத்தின் தார்மீகக் கடமையாகும்.  

“முஸ்லிம்களின் ஜனாசாக்கள் அடக்கம் செய்யப்பட்ட பின்னர் முன்கர், நக்கீர்  ஆகிய மலக்குகள் (வானவர்கள்) அங்கு வந்து  கேள்வி கணக்குக் கேட்பர்.  உலகிலே நாம் செய்த நன்மை,  தீமைகள் பற்றி அவர்கள் கேள்விக்குட்படுத்துவர். இந்த விடயத்தை நாங்கள் உறுதியாக நம்புகின்றவர்கள். 

“எனவேதான் எமது கோரிக்கையை அரசாங்கம் கருணையுடனும் மனச்சாட்சியுடனும் பரீசீலித்து ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியை உடனே தரவேண்டும்.  எமக்கான இந்த உரிமையை நீங்கள் பெற்றுத்தர வேண்டுமென தயவாக வேண்டுகிறேன்.

“அது மாத்திரமின்றி, முஸ்லிம்கள் ஜூம்ஆ தொழுகையின் போது பள்ளிவாசல்களில் ஆகக்குறைந்தது 40 பேர் வரையில் கலந்துகொள்வதற்கான அனுமதியை பிரதமர் , சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார அதிகாரிகள் பெற்றுத் தர வேண்டும். 

“இந்த உயர் சபையில் கூட 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூட முடியுமென்றால் 40 பேர் வரையில் சுகாதார முறைப்படி ஒன்று கூடி தொழுவதற்கு அனுமதி தர வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X