Niroshini / 2017 பெப்ரவரி 12 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
"கருணா அம்மானைக் கைதுசெய்யுங்கள், பிள்ளையானைக் கைதுசெய்யுங்கள் என சிங்கள மக்களோ, முஸ்லிம் மக்களோ கோரவில்லை. தமிழ் அரசியல் தலைவர்களே கோரினர். அவர்களை என்னால் கைதுசெய்ய வைக்கமுடியும். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன" என்று, கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்னும் கட்சியை மட்டக்களப்பில், நேற்று (11) ஆரம்பித்த பின்னர் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
"விடுதலைப் புலிகளினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அதனைத் தலைவர் சம்பந்தன் மறுத்திருந்தார். விடுதலைப் புலிகளுக்கும் அதற்கும் தொடர்பு இல்லையெனக் கூறியிருந்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் அடித்தளம் இட்டதில் நானும் ஒருவன். மட்டக்களப்பில் இருந்து, ஊடகவியலாளர் சிவராமின் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அதனைக்கூட சொல்வதற்கு துணிவில்லாத நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது.
தமிழ் மக்களைத் தலைமை தாங்குவதற்கும் அரசியல் ரீதியாகத் துணிந்து செயற்படுவதற்குமான தலைமைகள் அற்றுப்போயிருக்கின்றன. அந்த இடைவெளியை நிரப்ப வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கமாகும்.
நாம் கட்சியை ஆரம்பித்தவுடன் முதல் வேலையாக முன்னாள் போராளிகளின் குடும்பங்களை முன்னேற்ற வேண்டும். அவர்களின் வறுமை நிலை, துன்பங்களை பார்க்கும்போது கவலையாக உள்ளது. வன்னியில் எத்தனையோ போராளிகள் தற்கொலை செய்துள்ளனர்.
கிழக்கில் நுண்கடன்களாலும் ஆடம்பர செலவுகளாலும் கடன்தொல்லைகளாலும் தற்கொலைகள் நடந்துவருகின்றன. போராட்ட காலங்களில் இவ்வாறு நடக்கவில்லை. சாப்பிடுவதற்கு மரவள்ளிச் செய்கைதான் செய்தனர். பஞ்சத்தினால் நாம் சாகவில்லை.
எழுக தமிழ் நடந்து ஒரு மாத காலத்துக்குள் கைதிகள் விடுவிக்கப்பட்டால் அது பயனளிக்கும். இல்லாவிட்டால் அதில் பயனில்லை.
சுமந்திரனுக்கு முன்னாள் போராளிகளால் ஆபத்து என்று கூறப்பட்டது. இதனால் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் அனைவரும் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர். யாரையாவது காட்டிக்கொடுத்துவிடுவதே இவர்களின் வேலையாகும். சந்தேகத்தை உருவாக்கி முன்னாள் போராளிகள் அனைவரையும் மாட்டிவிடுகின்ற வேலையை சுமந்திரன் செய்திருக்கின்றார். கருணா அம்மான் கைது செய்யப்படலாம் என்றும் இவர் கூறியிருந்தார்.
நான்கு முன்னைநாள் போராளிகளை கொல்ல சதித் திட்டத்தினைத் தீட்டியுள்ளனர். இன்று வடகிழக்கில் 20 ஆயிரத்துக்;கும்மேற்பட்ட முன்னாள் போராளிகள் மிகவும் கஷ்ட நிலையில் இருந்துவருகின்றனர். 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கவீனப் போராளிகள் உள்ளனர். இவர்களின் அனைவரதும் இயல்பு வாழ்க்கையினை குழப்பும் வகையில்தான் சுமந்திரனின் செயற்பாடு இருக்கின்றது.
முன்னாள் போராளிகள் இணைந்து கட்சியை உருவாக்கியபோது, அதனை அரச கைக்கூலிகள் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியது. எவருக்கும் அரசியல் தொடங்குவதற்கு உரிமையுள்ளது" என்றார்.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago