2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலை தளபாடங்கள் வழங்கி வைப்பு

Gavitha   / 2016 ஜனவரி 23 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

தளபாட வசதிகள் இன்றி தரையில் அமர்ந்து கல்வி கற்று வந்த மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்வி கோட்டத்திலுள்ள அன்வர் வித்தியாலத்துக்கு, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், வெள்ளிக்கிழமை (22) தளபாடங்களை வழங்கி வைத்தார்.

பாடசாலைக்கு திடீர் விஜயத்தை மேற்கொண்ட அவர், பாடசாலையின் நிலைமையை கண்டறிந்து தரம் 01 மாணவர்ளுக்கான ஒரு தொகுதி கதிரை மேசைகளை அன்பளிப்பு செய்துள்ளார்.

'பாடசாலைகளில் தளபாட பற்றாக்குறை என்பது பாரிய பிரச்சினையாகும். 2014ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாணசபை வரவு-செலவு திட்ட விவாதத்தின் போது, இந்த விடயம் தொடர்பாக முன்மொழிந்திருந்தோம். இருந்தபோதிலும் இன்று வரை அதற்காக எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்' என்று ஷிப்லி பாறூக் இதன்போது தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'மாணவர்களின் கல்வி செயற்படுகளைச் சிறந்த முறையில் மேற்கொள்ளவேண்டுமாக இருந்தால், அடிப்படை வசதிகளான தளபாடங்கள், வகுப்பறைகள் என்பன நன்றாக அமைந்திருத்தல் வேண்டும். அந்த வகையில் காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்தில் கடந்த காலங்களில் தரம் 1க்கு 60 தொடக்கம் 70 வரையிலான மாணவர்கள் சேர்க்கப்பட்டார்கள். ஆனால் இம்முறை தரம் 1க்கு 160 மாணவர்கள் அனுமதிக்கப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. ஏனென்றால் இந்தச் சுற்றுவட்டாரத்தில் பல பாடசாலைகள் இருந்தும் கூட அந்த பாடசாலைகளில் மாணவர்கள் அனுமதிக்கப்படும் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டு இருந்ததனால் அவ்வாறான பாடசாலைகளில் பிள்ளைகளை அனுமதிக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. இதனால் இந்தப் பாடசாலையில் 160 மாணவர்கள் தரம் 1க்குள் அனுமதிக்கப்பட்டு, ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் வீதம் 4 வகுப்பறைகளில் மாணவர்களை உள்ளடக்கி மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கையை இப்பாடசாலை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனேக பாடசாலைகளில் இவ்வாறான குறைபாடுகள் காணப்படுகின்றது. பல மாணவர்கள் தரையிலும் பாய்களிலும் அமர்ந்து தமது ஆரம்ப கல்வியை கற்கின்ற ஓர் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

எனவே இந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் இப் பாடசாலையின் குறைகளை நிவர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக ஒரு மாத காலத்துக்குள் மேற்கொள்ள வேண்டுமென கிழக்கு மாகாணத்தின் கல்வி அமைச்சர் அவர்களிடமும், மற்றும் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் அவர்களிடமும் கேட்டுகொள்கின்றேன்' என்று அவர் வலியுறுத்தினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X