2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

பொருட்கள் திருடப்பட்டதாக முறைப்பாடு

Suganthini Ratnam   / 2016 ஜூன் 05 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

குவைத் நாட்டில் கடந்த ஏழு வருடங்களாக வீட்டுப் பணிப்பெண்ணாக கடமையாற்றும் தனது 26 வயதுடைய மகள் இதுவரை காலமும் உழைத்த சம்பாத்தியத்தின் மூலம் கொள்வனவு செய்து அனுப்பிய பொருட்களில் முக்கியமான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்புக்குச் சென்று வெளிநாட்டுப் பொதிகள் கையாளும் நிறுவனமொன்றிலிருந்து மகள் அனுப்பிய பொதிகள் இரண்டையும் பெற்றுக் கொண்டபோது மகள் அனுப்பிய முக்கியமான பொருட்கள் திருடப்பட்டு இருந்தமை தெரியவந்துள்ளது என்று தாயார் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் கொம்மாதுறை ஒருமுழச்சோலையைச் சேர்ந்த கே.மங்கையற்கரசி (வயது 54) என்பவரே பொதியிலுள்ள பொருட்கள் திருட்டுப்போனது பற்றிய முறைப்பாட்டைச் செய்துள்ளார்.

குடும்ப வறுமை காரணமாக கடந்த 7 வருடங்களாக குவைத் நாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்து வருவதாகவும் அந்த சம்பாத்தியத்தின் மூலம் சிறுகச் சிறுகச் சேர்த்து வாங்கிய பொருட்களை பொதி செய்து பொதி கையாளும் முகவர் நிறுவனம் ஒன்றினூடாக அனுப்பியிருந்தார்.

கொழும்பு சென்று பொதிகளைக் கையேற்றபோது பொதிகள் ஏற்கெனவே உடைக்கப்பட்டு அதனுள்ளிருந்த சுமார் 5 இலட்ச ரூபாய்க்கு மேற்பட்ட பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

இது தவிர வெளிநாட்டுப் பொதிகள் கையாளும் அந்த நிறுவனத்துக்கு பல்வேறுபட்ட கட்டணங்கள் உட்பட 34,300 செலுத்தியே பொதிகள் இரண்டையும் பெற்றுக் கொண்டோம் என்றும் அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X