2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

மட்டக்களப்பில் கால்நடைப் பண்ணையாளர்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2016 மே 30 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கால்நடைப் பண்ணையாளர்களின் பிரச்சினைகளை தீர்க்கக் கோரி இன்று திங்கட்கிழமை அங்கு மாபெரும் கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட கால்நடைப் பண்ணையாளர்கள் சங்கங்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் பேரணியானது,  மட்டக்களப்பு பஸ் நிலையத்துக்கு  முன்பாக ஆரம்பமாகி மாவட்டச் செயலகம் வரை சென்றது.
இதன்;போது, கால்நடைப் பண்ணையாளர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும்; மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தருமாறும் கோரிய பதாகைகளை பேரணியில் ஈடுபட்டோர் தாங்கியிருந்தனர்.

இந்த கவனயீர்ப்பு பேரணியில் ஈடுபட்டோர் தெரிவிக்கையில், 'மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை, வவுணதீவு, ஏறாவூர்ப்பற்று, கிரான், வாழைச்சேனை, வாகரை ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள மகாவலி அபிவிருத்திச் சபை, வனவிலங்குத் திணைக்களம், வனபரிபாலனத் திணைக்களம் ஆகியவற்றுக்குச் சொந்தமான எல்லைப் பகுதிகளில் உள்ள அரசாங்கக் காணிகளில் சுமார் 175,000 கால்நடைகள் நீண்டகாலமாக மேய்ச்சல் தரையாக பயன்படுத்திவந்த நிலையில், கடந்த காலத்தில் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்ததாகவும் அந்தப் பிரச்சினைகளுக்கு இதுவரையில் எதுவித தீர்வும் காணப்படவில்லை' என்றனர்.

'2011ஆம் ஆண்டு கிழக்கு மாகாண காணி ஆணையாளரினால் சுமார் 27 ஆயிரம் ஹெக்டேயர் காணிகளை மேய்ச்சல் தரையாக பிரகடனப்படுத்துமாறு மத்திய காணி ஆணையாளருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டபோதிலும், இதுவரையில் அது நிறைவேற்றப்படவில்லை.

மேய்ச்சல் தரையாக இனங்காணப்பட்ட பகுதிகள் சிலவற்றை மகாவலி அபிவிருத்தி சபையும் வன இலாகாவும் தங்கள் அபிவிருத்திப் பணிகளுக்காக வன வளர்ப்புகளை மேற்கொண்டுள்ள நிலையில் சில பகுதிகளில் அத்துமீறிய பயிர்ச் செய்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது கால்நடை வளர்ப்பாளர்களுக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது' எனவும் அ;வர்கள் கூறினர்.

இனங்காணப்பட்ட பகுதிகளை மேய்ச்சல் தரையாக பிரகடனப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும், மட்டக்களப்பு மாவட்ட இயற்கைச் சூழலுக்கு ஏற்றவாறு நல்லின காளைகளையும் பசுக்களையும் பண்ணையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,போக்குவரத்து பாதைகள் சீர்ப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.

இந்தப் பேரணியின்போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், எஸ்.வியாழேந்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார், இரா.துரைரெட்னம், மா.நடராஜா ஆகியோர்  கலந்துகொண்டதுடன் மகஜர்களும்; கையளிக்கப்பட்டன. மேலும், மாவட்ட அரசாங்க அதிபரையும் சந்தித்த கால்நடைப் பண்ணையாளர்கள் சங்க பிரதிநிதிகள் மகஜர் கையளித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X