2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மதுபானசாலைகளுக்கு எதிராக கவனயீர்ப்பு

வா.கிருஸ்ணா   / 2017 நவம்பர் 13 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபானசாலைகளைக் குறைக்கக் கோரியும் ஆரையம்பதியில் உள்ள மதுபானசாலைகளை அகற்றக் கோரியும் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று, இன்று (13) காலை முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையம் மற்றும் மகளிர் அமைப்புகள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், ஆரையம்பதி பிரதேச பொது அமைப்புகளின்  பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.

யுத்தத்துக்குப் பின்னர் மட்டக்களப்பில் அதிகளவான மதுபானசாலைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவற்றை மட்டுப்படுத்த உயர் அதிகாரிகள் நடவடிக்கையெடுக்கவேண்டுமென, இக்கவனயீர்ப்பில் வலியுறுத்தப்பட்டது.

ஆரையம்பதியில் இரண்டு மதுபானசாலைகள் சட்டவிரோதமான முறையில் இயங்கிவருவதாகவும் அதற்கு எதிராக 2015ஆம் ஆண்டிலிருந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகையில், அதனையும் மீறி, சில அதிகாரிகளின் அனுசரணையுடன், அந்த மதுபானசாலைகள் தொடர்ந்தும் இயங்கிவருவதாகவும் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

2018ஆம் ஆண்டு, குறித்த மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் வழங்கப்படக்கூடாது என இங்கு தெரிவிக்கப்பட்டதுடன், அதனை மீறி அனுமதி வழங்கப்பட்டால், தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

மதுபாவனைகள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுவருவதுடன், வறுமை நிலை, குடும்ப வன்முறைகளும் அதிகரித்துள்ளனவெனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

கவனயீர்ப்பைத் தொடர்ந்து மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயத்திடம் மகஜரென்றும் கையளிக்கப்பட்டது.

ஆரையம்பதியில் இயங்கிவரும் மதுபான விற்பனை நிலையம் தொடர்பில், இலங்கை மதுவரித்திணைக்கள உயர் அதிகாரிகள், மண்முனைப்பற்று பிரதேச செயலகத்துக்கு, இன்று (13) வருகைதந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள நிலையிலேயே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X