2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

மாவடிமுன்மாரியில் கட்டடம் உடைப்பு ; கடிதமும் வைப்பு

வ.துசாந்தன்   / 2017 ஓகஸ்ட் 01 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு, மாவடிமுன்மாரியில், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தால் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் புதிய கட்டடம், கடந்த வௌ்ளிக்கிழமை, இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளது.

கட்டடம் உடைக்கப்பட்ட இடத்தில்,  “இது, மாவீரர் துயிலும் இல்லம். இதில் யாரும் அனுமதியின்றி பிரவேசிப்பது குற்றம். இங்கு எந்தக் கட்டடம் கட்டப்பட்டாலும் உடைபடும். இப்படிக்கு, மாவடிமுன்மாரி மக்கள்” எனக் கடிதமொன்று வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளரிடம் வினவிய போது, “குறித்த பகுதியில் மத்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டின் கீழ், மருந்தகமொன்றை அமைப்பதற்கான கட்டடம் அமைக்கப்பட்டு வருகின்றது.

"இக்கட்டத்துக்கான அத்திபாரம் அமைக்கப்பட்டு, அத்திபாரத்துக்கு மேல் செங்கல் எழுப்பப்பட்ட நிலையில், அச்செங்கற்கட்டுகள் உடைக்கப்பட்டுள்ளன.

“இதனையடுத்து, மாவடிமுன்மாரி, பனிச்சையடிமுன்மாரி மக்களை அழைத்து நேற்று மாலை, கலந்துரையாடலொன்றை நடத்தினோம்.

“கூட்டத்தில் பங்கேற்ற மக்கள், இச்சம்பவத்துக்கும் தமக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையெனவும், குறித்த கட்டடம் அமைக்கப்படும் காணி துயிலும் இல்லத்துக்கு அண்மையில் உள்ளதே தவிர, துயிலும் இல்லக் காணி இல்லையெனவும், குறித்த இடத்தில் கட்டடம் அமைப்பதில் தமக்கு எவ்வித எதிர்ப்பும் இல்லை எனவும், தமக்கு இவ்வாறான கட்டடம் அமைக்கப்படவேண்டியது அவசியம் எனவும் குறிப்பிட்டனர்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .