2025 மே 22, வியாழக்கிழமை

‘மீண்டுமொருமுறை மக்களுக்கு விரோதம் இழைத்துள்ளார்கள்’

Editorial   / 2017 செப்டெம்பர் 17 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், பழுலுல்லாஹ் பர்ஹான்

“அரசாமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூல விடயத்தில் முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் மீண்டுமொருமுறை மக்களுக்கு விரோதம் இழைத்துள்ளார்கள்” என, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

காத்தான்குடியில் நேற்றிரவு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நடாத்திய மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“அரசமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூல விடயத்திலும் முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் மீண்டுமொரு முறை மக்களுக்கு விரோதமான முறையில் நடந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, கிழக்கு மாகாணசபை முதலமைச்சரும் முஸ்லிம் உறுப்பினர்களும் அரசமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூல விடயத்தில் நடந்து கொண்ட விதம் முஸ்லிம் சமுகத்தை ஏமாற்றமடையச் செய்திருக்கின்றது.

“எனவே, இது தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுடன் பகிரங்கமாக தேசிய ஊடகங்களில் பேசுவதற்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆயத்தமாக உள்ளது.

“இந்த அரசாங்கத்துக்கு ஒரே நாளில் மாகாண சபை தேர்தலை நடாத்துவதுதான் நோக்கம் என்றிருந்தால், இந்த வருடமே அனைத்து மாகாண சபை தேர்தலையும் நடாத்த முடியும்.

“அதற்காக மாகாண சபைகளுக்குரிய அதிகாரத்தை நாடாளுமன்றம் பறிக்க தேவையில்லை. மாகாண சபை கலைக்கின்றபோது முதலமைச்சருக்கு இருக்கின்ற அதிகாரங்களை பறித்தெடுக்க தேவையில்லை.

“இந்த அரசமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலம் மக்களின் அடிப்படை வாக்குரிமையை பறித்தெடுக்கின்ற ஒரு பாரதூரமான விடயமாகும். மக்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே தேர்தல்களில்  தமது வாக்குரிமையைப் பயன்படுத்தி தமது பிரதிநிதிகளைத் மக்கள் தெரிவு செய்கிறார்கள். எனவே, ஒவ்வொரு விடயங்களிலும் மக்களின் நலன்களை முதன்மைப்படுத்தியதாகவே நடந்து கொள்ள வேண்டியது அரசியல் பிரதிநிதிகளின் கடமையாகும்.  ஆனால், துரதிர்ஸ்டவசமாக மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்ட அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர் மக்களின் நலன்களைப் புறக்கணித்து விட்டு, தமது சொந்த இலாபங்களின் அடிப்படையிலேயே நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள்.

“இந்த விடயத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதம் ஜனநாயகத்தை நேசிக்கும் அத்தனை பெயரையும் கவலை கொள்ளச் செய்திருக்கிறது.  தமது பதவிக்காலம் ஒரு வருடத்தால் நீடிக்கப்படப் போகிறது என்ற ஒரே காரணத்துக்காக மக்களின் அடிப்படை வாக்குரிமையைக்கூட அடகு வைப்பதற்கு இவர்கள் துணிந்திருக்கிறார்கள்.

“மக்கள் பிரதிநிதிகளே மக்களுக்குத் துரோகம் செய்வதாக மாறுவதும் அவர்களின் அநியாயங்களுக்கு எதிராக நீதி கேட்டு மக்கள் நீதி மன்றத்துக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதும் ஆரோக்யமான நிலையல்ல. இது தொடர்வதனை இனிமேலும் அனுமதிக்க முடியாது” என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .