2025 மே 22, வியாழக்கிழமை

‘முந்தனையாறு திட்டத்தின் மூலம் தீர்வு கிடைக்கும்’

கே.எல்.ரி.யுதாஜித்   / 2017 செப்டெம்பர் 16 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

“முந்தனையாறு அபிவிருத்தித் திட்டத்துக்கென 145 பில்லியன் அமெரிக்க டொலர்களை உலக வங்கி ஒதுக்கியிருக்கிறது. இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்துவிடும்” என்று, மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (15) நடைபெற்ற விவசாய ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

“இலங்கையிலிருந்து 7 திட்டங்கள் உலக வங்கிக்கு முன்வைக்கப்பட்டபோதும் அவற்றில் களனி ஆற்றுத்திட்டம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலத்தினால் முன்வைக்கப்பட்ட முந்தனையாறு அபிவிருத்தித் திட்டம் ஆகியவற்றுக்கே அனுமதிகள் கிடைக்கப்பெற்றள்ளன.

“முந்தனையாறு அபிவிருத்தித் திட்டத்துக்கென 145 பில்லியன் அமெரிக்க டொலர்களை உலக வங்கி ஒதுக்கியிருக்கிறது. இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மாவட்டத்தில் வருடா வருடம் ஏற்படுகிற வெள்ளம்  தடுக்கப்படும். குடிநீர்ப் பிரச்சினை, வரட்சி, ஆற்றுவாய்களின் பிரச்சினைகள், வாழ்வாதாரப்பிரச்சினைகள் என 98 சதவீதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

“கடந்த போகத்தில் நாடு பூராகவும், வரட்சி என்ற காலகட்டத்தில் மத்திய, மாகாண நீர்ப்பாசனத் திணைக்களங்கள், கமநல சேவைகள் பிரதிப்பணிப்பாளர் ஆகியோரது நீர் முகாமைத்துவச் செயற்பாட்டின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வரட்சி அழிவு ஏற்படவில்லை. அதற்கப்பால், வழமைக்கு மாறான சிறந்த விளைச்சல் கிடைத்துள்ளது.

“விதை நெல்லுக்கான பிரச்சினை தொடர்ந்தும் ஏற்பட்டு வருகிறது. விதை என்பது மிகவும் முக்கியமானதொன்று விதை சரியாக அமையாவிட்டால், நீர் உட்பட சகல வளங்கள், மனித உழைப்பு என அனைத்துமே வீணாகவே செலவு செய்யப்படும் நிலை உருவாகும். எனவே, விதை  நெல் விநியோகத்தை சரியான வகையில் விவசாயிகளுடைய தேவைகளுக்கு ஏற்ப வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

“விதை நெல் தயார் படுத்துவதற்கான நிலையம் வந்தாறுமூலையில் அமைக்கப்பட்டள்ளது. மாவட்டத்தில் ஏற்படும் விதை நெல் தட்டுப்பாட்டுப் பிரச்சினைக்கு அந்த நிலையத்தைப் பயன்படுத்த முடியும். விவசாயிகள் தூரம் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்களாயின், தங்களுக்குள் ஒரு சிலரை அடையாளப்படுத்தி அவர்கள் ஊடாக இந்த நடவடிக்கையினை மேற்கொள்ளலாம். அதன் மூலம் மாவட்டத்தின் விதை நெல் தட்டப்பாட்டைக் குறைப்பதறகும் வெளி இடங்களில் இருந்து வருகை தரும் நிறுவனங்களுக்கு மக்களின் பணம் செல்வதனையும் குறைக்கலாம்” என்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .