2025 மே 19, திங்கட்கிழமை

‘யானையிடம் மரத்தை அடகு வைக்கவில்லை’

எம்.சி. அன்சார்   / 2017 டிசெம்பர் 25 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தனித்தும், ஐக்கிய தேசியக்கட்சியோடு இணைந்தும், முஸ்லிம் தேசிய கூட்டமைப்பிலும் மற்றும் ஜனநாயக ஐக்கிய முன்னணியிலும் இணைந்து நாடு முழுவதிலும் நான்கு விதமாக முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுகின்றது என, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

 

மேலும், “அதிகமாக ஆசனங்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும், பல உள்ளூராட்சிமன்றங்களின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கிலுமே, முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து போட்டியிடுகின்றதே தவிர, எமது கட்சியை ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியிடம் நாம் அடகு வைக்கவில்லை” எனவும் குறிப்பிட்டார்.

சம்மாந்துறை பிரதேச சபைக்கான தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுடனான சந்திப்பு நேற்று (24) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து போட்டியிட வேண்டுமென்ற முடிவானது, மிகவும் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு எல்லோராலும் எடுக்கப்பட்ட முடிவாகும். இந்த இணைப்பின் மூலம் எமது கட்சிக்கு கிடைக்கின்ற வாக்குகளைக் கூட்டிக்கொள்வதற்காக தேவையான வியூகங்களை வகுப்பதற்காகவே தவிர ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாம் எதனையும் அடகு வைக்கவில்லை என்பதை நான் மிகவும் தெளிவாகவும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

“அம்பாறை மாவட்டத்தின் முக்கியமான இடங்களில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுகிறோம். அங்கு யானையில் போட்டியிடும் வேட்பாளர்களை நாங்கள்தான் தெரிவுசெய்கிறோம். ஐக்கிய தேசியக் கட்சிக்கார்களாக இருந்தாலும் சரி, அவர்கள் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதை நாங்கள்தான் தீர்மானிப்போம். அந்தளவு அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சி அம்பாறை மாவட்டத்தில் எங்களுக்கு தந்துள்ளது. அந்த உரிமையுடன்தான் நாங்கள் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகிறோம்.

“அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள அனைத்து சபைகளுக்கான ஐக்கிய தேசியக்கட்சியின்  வேட்பாளர் பட்டியலை நாங்கள்தான் தயாரித்திருக்கிறோம். ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் முகவர்களாக எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

“ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நான்கு விதமான முறைகளில் எதிர்வருகின்ற  உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்‌றது. பல இடங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யானை சின்னத்திலும், சிங்கள பிரதேசங்களில் எங்களுடைய ஜனநாயக ஐக்கிய முன்னணி கட்சியில்  இரட்டை இலை சின்னத்திலும், சில இடங்களில் எங்களது முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் தராசு சின்னத்திலும், அதிகமான இடங்களில் முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்திலும் போட்டியிடுகிறது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X