2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

உங்களின் மகள் வயதுக்கு வந்து விட்டாளா?

A.P.Mathan   / 2013 ஜனவரி 30 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


பெண்களின் வாழ்க்கையில் மாதவிடாய் என்பது முக்கியமான ஓர் இடத்தினை வகிக்கின்றது. அதிலும் இளம் பெண்கள் மாதவிடாய் குறித்து முழுமையான அறிவை பெற்றிருப்பதுடன், அது தொடர்பாக விழிப்புனர்வுடன் இருப்பதுவும் அவசியம்.

பொதுவாக பெண் பிள்ளைகளைப் பொறுத்தவரைக்கும் அவர்கள் 9 – 16 வயதிற்குள் கட்டாயம் தனது முதலாவது மாதவிடாயை வெளிப்படுத்த வேண்டும். அதாவது பூப்படைய வேண்டும். ஒரு பெண் பிள்ளை 16 வயதாகியும் பூப்படையவில்லை என்றால்; பெற்றோர்கள் அது தொடர்பில் கட்டாயம் வைத்தியரை நாடுவதே சிறந்தது.

பெண் பிள்ளைகளின் உடலில் சாதரணமாக 9 வயதிற்கு மேல் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட ஆரம்பிக்கும். உதாரணமாக அவர்களது உடலின் சில பகுதிகளில் முடி வளர ஆரம்பிக்கும். முகங்களில் பருக்கள் ஏற்படும். அத்துடன் மார்பகங்களும் விருத்தியடையத் தொடங்கும். இதுவே அப்பிள்ளை பருவமடைவதற்கான சில அறிகுறிகளாகும்.

மேலும் மார்பக விருத்தியானது கட்டாயம் 14 வயதிற்குள் ஏற்பட வேண்டும். அத்துடன் அந்த வயது எல்லைக்குள்ளேயே பூப்படைவதும் சிறந்தது. இல்லையேல் குறைந்தது 14 வயதிற்குள் மார்பகங்கள் விருத்தியடைந்து ஆக கூடியது 16 வயதிற்குள் கட்டாயம் பூப்படைந்துவிட வேண்டும்.


இவ்வாறு 14 வயதிற்குள் மார்பகங்கள் விருத்தியும் ஏற்படாமல் இருந்து 16 வயதாகியும் பூப்படையாமல் இருப்பார்களேயானால் உடனடியாக வைத்தியரை நாடுவதே மிகவும் சிறந்தது. இல்லாவிட்டால் அது உங்கள் பெண் பிள்ளைகளை உடல் ரீதியில் மாத்திரமன்றி உளவியல் ரீதியாகவும் பெரும் பாதிப்புக்குள்ளாக்கி விடும். ஆமாம் தன்னுடன் இருக்கும் சக பிள்ளைகளின் உடல் வளர்ச்சி மட்டும் மாற்றங்கள் தொடர்பில் சிந்தித்து இயல்பாகவே அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி விடுவதுடன் அவர்களின் இயல்பான வாழ்க்கையில் விரக்தியையும் ஏற்படுத்தி விடும்.

இதனை ஏன் நாம் வலியுறுத்துகிறோம் என்றால் இன்று பெரும்பாலான குடும்பங்களில் கணவனும் மனைவியும் வேலைக்கு செல்கின்றனர். இதனால் பிள்ளைகளுடன் மனம் விட்டு பேசுவதற்கு கூட நேரம் இல்லாமல் போய்விடுகின்றது. பிள்ளைகளுக்கு தேவை ஏற்பட்டால் தம்மிடம் கேட்பார்கள் தானே என விட்டு விடுகின்றனர்.


ஆனால் எல்லோரும் அவ்வாறு இருப்பது இல்லை. சில பெண் பிள்ளைகள் அவர்களது உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து உங்களுடன் வெளிப்படுத்துவதற்கு கூட தயங்கலாம். அதனை நீங்கள் எளிதாக அறிந்துகொள்ள வேண்டுமாயின் அவர்களோடு நட்புறவுடன் பழக வேண்டும். அப்போது தான் அவர்கள் எவ்வித தயக்கமும் இன்றி உங்களுடன் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வார்கள். இதன் மூலம் உங்களால் அவர்களின் தேவைகளையும் அவர்களுக்குள் நிகழும் மாற்றங்களையும் தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.

எனவே பெண் பிள்ளைகளின் உடல் வளர்ச்சி தொடர்பாகவும் அவர்களில் நாளாந்தம் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பாகவும் பெற்றோர் மிகவும் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியமான ஒன்றாகும். அப்போது தான் குறித்த வயது எல்லைக்குள் அவர்களால் தனது முதலாவது மாதவிடாயை வெளிப்படுத்த முடியுமா என்பதையும் நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.

-தம்பி

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X