2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

'நாட்டின் அபிவிருத்திகள் முடங்கி விட்டன' : மஹிந்த

Sudharshini   / 2016 மார்ச் 07 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

புதிய அரசாங்கத்தின் ஆட்சியில் நாட்டின் அபிவிருத்திகள் முடங்கிவிட்டதாகவும் தமது ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களைக்கூட தற்போதைய அரசாங்கம் திறந்து வைக்க முடியாதுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுந்திர கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ சாடியுள்ளார்.

'ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள திறமையானவர்களை வெளியேற்றிவிட்டு, மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களை நியமிப்பதனூடாக தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெருவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.  

கண்டி, நுகவெலயில் அமைந்துள்ள கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவின் அலுவலகத்தில், சனிக்கிழமை (05) மாலை நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ';சில தினங்களில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும். பாரிய அளவில் வெளிநாட்டுக் கடனை பெறுவதற்கு அரசாங்கம் தயாராகி வருகின்றது. இதன் விதிமுறைகள் மிகவும் அபாயகரமானது. எதிர்வரும் தினங்களில் அவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்' என்றார்.

இங்கு மேலும் கூறிய அவர், 'முன்னாள் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை திறந்து வைக்க முடியாத நிலையில், தற்போதைய அரசாங்கம் முடங்கியுள்ளது. நாம் எமது ஆட்சியில், நாட்டிலுள்ள 1,000 பாடசாலைகளில்  தொழில்நுட்;ப நிலையங்களை அமைத்துள்ளோம். ஆனால், அவை இன்னும் திறக்கப்படவில்லை.

நாடு முழுவதிலும் விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  எமது ஆட்சியில், 350 ரூபாய்க்கு வழங்கப்பட்ட உரத்தை, தற்போதைய அரசாங்கத்தால் வழங்க முடியாதுள்ளது.  என்னை திருடன் என கூறியபோதிலும் நான் விவசாயிகளுக்கு 350 ரூபாய்க்கு உரத்தை வழங்கினேன்.  நாட்டை அபிவிருத்தி செய்தேன், பாதைகளை நிர்மாணித்தேன். ஆனால், தற்போதைய அரசாங்கத்தினால் அவை எதனையுமே செய்ய முடியவில்லை' என்றார்.

'ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் வெற்றிக்கு அயராது உழைத்தவர்களை அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, மக்கள் நிராகரித்தவர்களை நியமிப்பதனூடாக, தற்போதைய அரசாங்கம் ஐக்கிய தேசியக் கட்சியின் தேவைகளை பூர்த்தி செய்வதாக உள்ளது' எனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .