2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

யுத்த வீரர்கள் நினைவு மண்டபத்தை பராமரிப்பதில் நிதி நெருக்கடி

Super User   / 2010 ஒக்டோபர் 12 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

இலங்கையில் முதன் முதலாக நிறுவப்பட்ட கண்டி, கட்டுகஸ்தோட்டையில் அமைந்துள்ள அகில இலங்கை யுத்த வீரர்கள் நினைவு மண்டபத்தையும் அதன் செயற்பாட்டையும் தொடர்ந்து பராமரிக்க முடியாத பொருளாதார நெருக்கடி நிலை உருவாகியுள்ளதாக அதன் நிர்வாகம் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது அறிவித்தது.

கட்டுகாஸ்தோட்டையில் அமைந்துள்ள அகில இலங்கை யுத்த வீரர்கள் அமைப்பை தொடந்தும் நடத்தமுடியாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அதனை ரனவிருசேவா (யுத்த வீரர் சேவை) அதிகார சபை பொறுப்பேற்க வேண்டுமென அகில இலங்கை யுத்த வீரர்கள் அமைப்பினர் வேண்டுகோள் விடுத்தனர்.

கட்டுகஸ்தோட்டையில் அமைந்துள்ள ஐந்து மாடிகளைக் கொண்ட கட்டிடம் உட்பட அனைத்து உடைமைகளையும் பொறுப்பேற்கும் படி அதன் தலைமையகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இக்கூட்டத்தில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா, மத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, மத்திய பிராத்தியத்திற்குப் பொறுப்பான இராணுவத்தின் கட்டளையிடும் அதிகாரி செனரத் பண்டார தவுலகல, கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.பி.தியகெலினாவல என பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா,

இம்மண்டபத்தை தொடர்ந்து நடத்த முடியாத பட்சத்தில் தேவைப்படின் அதிகார சபைக்கு வழங்க நடவடிக்கை எடுக்க முடியும். அதற்கான சட்ட ஏற்பாடுகள் பற்றி தேவையான தகவல்களை சேகரித்த பின் இது விடயமாக அறிவிப்பதாகவும் அத்துடன் தொடர்ந்து நடத்தத் தேவையான இடைக்கால நிதித் தேவைகளையும் தற்காலிகமாகப் பெற்றுத் தரமுடியும் எனத் தெரிவித்தார்.

இலங்கையில் யுத்த வீரர்கள் நினைவாக முதன் முதலாக அமைக்கப்பட்ட ஒரு அமைப்பாக இது உள்ளது. 1992ஆம் ஆண்டு மேஜர் ஜெனரல் டென்ஸில் கெப்பேகடுவ மரணமடைந்த போது இது ஸ்தாபிக்கப் பட்டு இன்று வரை இயங்கி வருகிறது.

இதில் யுத்தத்தின் போது உயிர் நீத்த 22,000 முப்படைகளினதும் பொலீஸாரினதும் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் மேஜர் ஜெனரல் டென்ஸில் கொப்பேகடுவவின் உருவச்சிலையும் இங்கு நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X