2025 ஜூலை 14, திங்கட்கிழமை

அமைச்சர் திகாம்பரத்தின் மூலம் மலையகம் அபிவிருத்தியடையும்

Kogilavani   / 2015 ஏப்ரல் 22 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பி.திகாம்பரத்தின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வீடமைப்புத் திட்டத்தின் மூலம் மலையகம் அபிவிருத்தி அடையுமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

வட்டவளை மீனாட்சி தோட்டத்தில் சனிக்கிழமை(18) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் திகாம்பரம் அரசியலுக்கு வந்த பின்னர்தான் மலையக அரசியல் களைகட்டத் தொடங்கியது.

அவர் தமது சொந்தப் பணத்தில்தான் ஆரம்ப காலத்தில் வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வந்தார். தொடர்ந்து மத்திய மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு ஆங்காங்கே அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வந்த பிறகுதான் மலையகத்தில் ஏனைய அரசியல்வாதிகளும் சுறுசுறுப்பு அடையத் தொடங்கினார்கள்.
அதன் பிறகு அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதி விபரங்களும் வெளிவரத் தொடங்கின. அதற்கு முன்னர் மக்கள் எந்த ஒரு

விபரத்தையும் அறியாதவர்களாகவே இருந்தார்கள்.

மாகாண சபை உறுப்பினராக இருந்து நாடாளுமன்ற உறுப்பினராகி, பிரதியமைச்சராகி, இன்று அமைச்சரவை அந்தஸ்து பெற்ற அமைச்சராக உயர்ந்துள்ளார்.

அமைச்சர் திகாம்பரம் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏழு பேர்ச் காணியுடன் தனி வீட்டுத் திட்டத்தை மேற்கொள்வதாக உறுதியளித்திருந்தார். அவர் மக்களுக்கு வழங்கியிருந்த உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் இன்று மலையகத்தில் வீடமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசியல்வாதிகள் காலத்துக்குக் காலம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்குவார்கள். ஆனால், அதனை நிறைவேறறுவதில்லை.  எமது தலைவர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி காட்டினார். செய்யக் கூடிய விடயங்களை மட்டுமே அவர் கூறுவார். வெறுமனே வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்ற அவர் ஒருபோதும் விரும்பியதில்லை.

மலையக மக்களின் குடியிருப்புப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். அவரது பதவிக் காலத்தில் மலையகத்தில் மாற்றம் ஏற்பட்டு அபிவிருத்தி அடைவது உறுதியாகியுள்ளது.

எனவே, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மலையக மக்கள் ஒருமித்து வாக்களித்து நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது போல, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் சிந்தித்து வாக்களித்து தமக்கு உண்மையாக சேவை செய்யக் கூடியவர்களை வெற்றிபெறச் செய்யத் தயாராக வேண்டும். அதுவே, மலையகத்தின் உண்மையான மாற்றத்துக்கு வழி வகுக்கும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .