2025 ஜூலை 09, புதன்கிழமை

'சட்டவிரோத இடமாற்றங்களை தடுக்க வேண்டும்'

Kogilavani   / 2015 மே 07 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன்

நியமிக்கப்பட்ட பாடசாலைகளில் 10 வருடங்கள் கடமையாற்றாத ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இரத்துசெய்யப்பட வேண்டுமென மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மலையக பெருந்தோட்ட பாடசாலைகளில் பெருமளவு ஆசிரியர் தட்டுப்பாடு நிலவுகிறது. அதனால்தான் கடந்த வருடம்; முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் அவசர கோரிக்கையை ஏற்று 3000ம் ஆசிரியர் உதவியாளர் நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அரசாங்கம் இந்த நியமனங்களை முறையாகவும் விரைவாகவும் வழங்கி முடிக்கவேண்டும்.

இந்நியமனத்தில் மலையகத்தில் படித்துவிட்டு வேலையற்றுள்ள இளைஞர், யுவதிகளை உள்வாங்க வேண்டும் என்பதற்காகவே சலுகைகள் வழங்கப்பட்டன.

ஆனால், இந்த நியமனத்தில் தோட்டங்களோடு சம்பந்தமே இல்லாதவர்கள் நுழைந்து கொண்டுள்ளதாக அறியமுடிகிறது. எமது சமூகத்துக்காக பெற்றுக்கொள்ளப்பட்டதை தட்டிப்பறிப்பதிலேயே சிலர் குறியாக உள்ளனர்.

இதுதடுத்து நிறுத்தப்பட வேண்டும். மலையக பாடசாலைகளில் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட ஆசிரியர் நியமனங்களின் நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளன. நியமனம்பெற்ற பாடசாலையில் பத்து வருடங்கள் கட்டாய கடமையாற்ற வேண்டும் என்ற நிபந்தனை மீறப்பட்டுள்ளது.

பல்வேறு அரசியல் மற்றும் அதிகார செல்வாக்கை பயன்படுத்தி பலர் தமது சொந்த இடங்களுக்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ளனர். நகரங்களில் உள்ளவர்கள் தோட்டப்பகுதி இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய ஆசிரியர் தொழிலை தட்டிப்பறிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் நியமனம் கிடைத்த சில காலத்திலேயே அப்பாவி தோட்டத்தொழிலாளர்களின் குழந்தைகளின் வகுப்புக்களை வெறுமையாக்கிவிட்டு வீட்டுக்கு அருகிலுள்ள பாடசாலைக்கு இடமாற்றமும் பெற்றுக்கொள்கின்றனர்.

இவ்விடயம் சட்டத்துக்கு முறணானது என்பதை இப்போது நான் சுட்டிக்காட்டுகின்றேன்.

இந்த சட்டவிரோத இடமாற்றங்கள் இரத்து செய்யப்பட வேண்டும். இவ்வாறான ஆசிரியர்களை மீண்டும் அப்பாடசாலைகளுக்கே இடமாற்றம் செய்து   பத்து வருடங்கள் அந்தப் பாடசாலைகளில் கடைமையாற்றும்படி  பணிக்கவேண்டும்.

அதேபோல பத்து வருடங்களுக்கு இடமாற்றம் பெறமுடியாத சில ஆசிரியர்கள் வேறு பாடசாலைகளுக்கு இணைக்கப்பட்டுள்ளார்கள்.

தேவையற்ற, முறையற்ற முறையில் இந்த இணைப்பு இடமாற்றங்கள் நடைபெற்றுள்ளன. இதுதொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .