2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

‘அரசாங்கத்திலிருந்து விலகுவோம்’: திகா அதிரடி

Nirosh   / 2019 ஜனவரி 30 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் எதிர்வரும் முதலாம் (01) திகதி நடைபெறும் பேச்சுவார்த்தையில், 140 ரூபாய் ஊக்குவிப்புத் தொகை​யை வழங்க இணக்கம் தெரிவிக்கப்படாவிடின், அரசாங்கத்திலிருந்து விலகுவது உறுதியென அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். 

அவரது அமைச்சில், நேற்று (30) சில ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

தொடர்ந்து தெரிவித்துள்ள அவர்,   முதலாம் திகதிக்குப் பின்னர், ஹட்டனில் தமிழ் முற்போக்குக் கூட்டணி பாரிய சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் கூறினார்.  

40 சதவீத சம்பள உயர்வு பெற்றுக்கொடுத்துவிட்டதாக இ.தொ.காவின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானும் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷூம் மார்தட்டினாலும், வெறும் 20 ரூபாயே சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

கடந்தமுறை போன்றே, இம்முறையும் கூட்டொப்பந்தத்தில் மலையக மக்களை, இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷூம் இ.தொ.காவின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானும் காட்டிக்கொடுத்துள்ளார்கள் எனவும் தெரிவித்தார். 

சிலரைப் போல பதவி துறக்கப்போவதாக போலிப் பிரசாரங்களை தான் செய்யப்போவதில்லை என்றும், மக்களுக்கு யார் துரோகம் செய்திருந்தாலும் தமிழ் முற்போக்குக் கூட்டணி வேடிக்கை பார்த்துகொண்டிருக்காது என்றும் அவர் கூறினார்.  

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் நவீன் திசாநாயக்க உள்ளிட்டோர் மலையக மக்களுக்குத் துரோகம் செய்துவிட்டார்கள் என்றும், ஆகவே முதலாம் திகதி நடைபெறும் பேச்சுவார்த்தையில், ஊக்குவிப்புத் ​தொகை 140 ரூபாயை வழங்க மறுத்தால், அரசாங்கத்துக்கு வழங்கி வரும் ஆத​ரவை மீளபெறுவதோடு, அமைச்சுப் பதவியைத் தூக்கியெறியவுள்ளதாகவும் அவர் கூறினார்.  

“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை​ பெற்றுக்கொடுத்திருக்கிறேன்; இனி நான் யாருக்கும் அஞ்சப்போவதில்லை” என இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளமையை ஞாபகப்படுத்தியஅவர், அவரை, நுவரெலிய மாவட்டத்துக்குள் வருமாறு எச்சரிக்கை விடுத்தார்.  

“வடிவேல் சுரேஷ் போன்ற துரோகிகளை, மலையத்திலிருந்து விரட்டியடிக்க வேண்டும்” என்றும் “வடிவேல், ஆறுமுகன் ​தொண்டமான் ஆகியோரே அடிப்படைச் சம்பளமாக 1,000 ரூபாய் ரூபா கோரிக்கையை முன்வைத்தார்கள். அதைத் தோட்டத் தொழிலாளர்கள் முன்வைக்கவில்லை. நாம் ஆரம்பத்திலிருந்து, நியாயமான சம்பள அதிகரிப்பையே கோரியிருந்தோம்” என்றும் கூறினார்.  

இதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் அச்சு ஊடகங்கள் புறக்கணிப்பட்டிருந்ததோடு, இந்த ஊடகவியலாளர் சந்திப்புக்குச் சென்ற ஊடகவியலாளர்கள் பலருக்கும், அனுமதியும் மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .