Kogilavani / 2021 பெப்ரவரி 18 , பி.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்.ரமேஸ்
தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் நாள் சம்பளத்தைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பான இறுதித் தீர்மானம், நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல், தொழில் அமைச்சில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் போது எட்டப்படும் என்று தெரிவித்த பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ், இந்தப் பேச்சுவார்த்தையின் போது, ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பான ஆட்சேபனைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்படும் என்றும் தெரிவித்தார்.
அதன் பின்னர், மற்றுமொரு வாக்கெடுப்பு நடத்தப்படுமென்றும் தெரிவித்தார்.
அவ்வாறு வாக்கெடுப்புக்கு விடும் பட்சத்தில், எந்தவொரு நிபந்தனைகளும் இன்றி, ஆயிரம் ரூபாயைத் தொழிலாளர்களுக்கு வழங்க எடுக்கப்படும் தீர்மானத்துக்கு ஆதரவாக, இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் இரண்டு வாக்குகளையும் வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்துரைத்த அவர், சம்பள நிர்ணயச் சபையில், வாக்கெடுப்பின் ஊடாகத் தீர்மானிக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு விடயம் ஆட்சேபனைக்கு விடப்பட்டுள்ள நிலையில், கிட்டத்தட்ட 150க்கும் 200க்கும் இடைப்பட்ட ஆட்சேபனை மனுக்களை, பெருந்தோட்டக் கம்பனிகளும் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களும் சமர்ப்பித்துள்ளனர் என்றார்.
தனக்குக் கிடைத்தத் தகவலின்படி, இருநூறுக்கு உட்பட்ட மனுக்கள் கிடைத்திருக்கின்றன என்றும் என்ன நடந்தாலும் ஆயிரம் ரூபாய்க்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நிபந்தனைகள் இல்லாமலும் வழமை மாறாமல் தொழில் நடவடிக்கைகளை முன்னெடுத்து ஆயிரத்தை வழங்க வேண்டும் எனவும், அதேநேரத்தில், வேலை நாள்கள் மற்றும் சலுகைகள் குறைக்கப்படும் பட்சத்தில், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சம்பள நிர்ணய சபையில் சம்பளம் தீர்மானிக்கப்பட்டாலும், சம்பளத் தொகைக்கு ஆட்சேபனை தெரிவிக்கலாம் என்ற அவர், இருப்பினும், நாளை (19) இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தை, இறுதி தீர்வைத் தரும் எனவும் தெரிவித்தார்.
மாதம் 25 நாள்கள் வேலை, வருடம் 300 நாள் வேலை முறைமை மாற்றப்படக் கூடாது எனவும் தற்போது கொய்யும் கொழுந்தின் அளவு மேலும் அதிக்கரிக்கப்படக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சம்பள விடயம் தவிர்ந்த தொழிலாளர்கள் நலன்புரி விடயம் தொடர்பான கூட்டு ஒப்பந்தம் தொடர்ந்து இடம்பெறும் என்றும் அதில் மாற்றம் இல்லை என்றும், அந்த ஒப்பந்தத்தில் தாம் கையொப்பம் இடுவோம் என்றும் தெரிவித்த சுரேஸ் எம்.பி, தொழிலாளர்கள் நலன்புரிசார் உரிமை ஒப்பந்தம் வேறு; சம்பள உயர்வு ஒப்பந்தம் வேறு எனவும், இவ்விரண்டையும் கம்பனிகள் ஒன்றுபடுத்த நினைப்பதுமொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடுச்சிபோடும் செயலாகும் என்றார்.
சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்ட பின், உரிமை சார் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்றும் கூறிய அவர், சம்பள உயர்வு விடயம் தொடர்பில் மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில், அரசாங்கம் வெளிப்படையாகச் செயற்பட வேண்மென்றார்.
இந்த விடயத்தில், ஒளிவு – மறைவு இருக்கக் கூடாது எனவும் தெரிவித்த அவர், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, கம்பனி நிர்வாகங்கள் இப்போதே தொழில் ரீதியாக நெருக்கடிகள் வழங்க ஆரம்பித்து விட்டதாகவும் தெரிவித்த அவர், இவ்வாறான நிலையைத் தொடரவிட இடமளிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தினார்.
இந்தச் சம்பள உயர்வு விடயத்தில், எதிர்க் கட்சிகள் எதிர்ப்புக் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது என கேட்டபோது பதிலளித்த வடிவேல் சுரேஸ் எம்.பி, 'நானும் எதிர்க் கட்சிதான். சம்பள நிர்ணய சபையில் வாக்கு வழங்க என்னிடமும் இரண்டு வாக்குகள் உள்ளன. ஆனால் நாங்கள், ஆதரவாகத்தானே வழங்கியுள்ளோம். நாம் ஆதரவாக வாக்களிக்காமல், நிர்ணய சபையில் கடந்த 8ஆம் திகதியன்று வெற்றியீட்டியிருக்க முடியுமா?' என, நகைப்புடன் தெரிவித்தார்.
எனவே, தொழிற்சங்கத் தரப்பில் அரசாங்கத்தி ஆதரவுடன் 11 வாக்குகள் உள்ளன எனவும் கம்பனிகள் தரப்பில் 8 வாக்குகள் இருப்பதாகவும் கூறிய அவர், அதனால், தொழிலாளர்களுக்குக் கட்டாயம் நியாயம் கிடைக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
அதேநேரத்தில், தொழிற்சங்கத் தரப்பில் காணப்படும் எட்டு வாக்குகளில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு இரண்டு வாக்குகளும் இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்திடம் இரண்டு வாக்குகளும் சமமாக உள்ளதாகவும், அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
4 minute ago
15 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
15 minute ago
45 minute ago