Editorial / 2019 டிசெம்பர் 20 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.தியாகு
நுவரெலியா மாவட்டத்தில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக, நீர் நிலைகளிலும் ஆறுகளிலும் குளிப்பதை முற்றாகத் தவிர்த்துக் கொள்ளுமாறு, நுவரெலியா மாவட்டச் செயலாளர் என்.பீ.ரோஹன புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
கடந்த சில நாள்களாக நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலை நிலவி வருவதால், இங்குள்ள நீர்நிலைகளின் நீர் மட்டம் வெகுவாக உயர்வடைந்துள்ளது என்றும் அது மட்டுமல்லாமல் ஆறுகளின் நீர் மட்டமும் உயர்வடைந்துள்ளதாகவும், எனவே இங்கு வருகின்ற சுற்றுலா பயணிகள், ஆறுகளிலும் ஏனைய நீர்நிலைகளிலும் குளிப்பதையும் சிறுவர்களை அவற்றில் விளையாடுவதற்கு அனுமதிப்பதையும் முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இது பாடசாலை விடுமுறை காலம் என்பதால், அதிகமான பாடசாலை மாணவர்கள், சுற்றுலா பயணிகளாக வருகை தருகின்றார்கள். அத்துடன் சிவனொளிபாத மலை யாத்திரை காலமும் ஆரம்பமாகியுள்ளதால், அங்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் வருகை தருகின்றனர்.
இவ்வாறு வருகை தருகின்ற மாணவர்கள், இங்குள்ள குளங்களிலும் ஆறுகளிலும் நீர் வீழ்ச்சிகளிலும் குளிப்பதற்கு முற்படுகின்றார்கள். இதன் காரணமாக, நீரில் அடித்துச் செல்லும் அபாயம் ஏற்படலாம். எனவே அவர்களை பெற்றோர்கள் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
கடந்த காலங்களில் கவனயீனம் காரணமாக பலர் இங்கு வந்து நீரிழ் மூழ்கி உயிரிழந்த சம்பவங்களும் இடமபெற்றுள்ளன. அதேநேரத்தில், இங்குள்ள பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளதால், நீர் நிலைகளின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது.
எனவே இது தொடர்பாக பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு, நுவரெலியா மாவட்டச் செயலாளர் என்.பீ.ரோஹன புஸ்பகுமார பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .