Sudharshini / 2015 செப்டெம்பர் 23 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன், செ.தி.பெருமாள், சிவாணி ஸ்ரீ
இரத்தினபுரி, லெல்லோபிடிய தோட்டத்தின் போபெத்த பிரிவில் செவ்வாய்க்கிழமை (22) இரவு, இரு தரப்பினருக்கு இடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதுடன் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இரு தரப்பினருக்குமிடையிலான மோதலில் இருவர் படுகாயமடைந்த நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தோட்டத்திலுள்ள இந்து ஆலயமொன்றின் வருடாந்த தேர் திருவிழாவுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவரை, பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த சிலர் செவ்வாய்க்கிழமை இரவு (22) தாக்கியதால் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விளைஞனைத் தாக்கிய மற்றுமொரு இளைஞனை தோட்டத்தொழிலாளர்கள் இணைந்து தாக்கியதால் தாக்குதலில் காயமடைந்த அவ்விளைஞனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம், குறித்து போபெத்த தோட்ட ஆலய பரிபாலன சபையினர் உடனடியாக, மலையக மக்கள் முன்னணியின் உப-தலைவர் ரூபன் பெருமாளுக்கு தொலைபேசி மூலமாக அறிவித்ததையடுத்து, அவர் இரத்தினபுரி மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் பெல்மதுளை பிரதேச செயலாளர் ஆகியோருடன் தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து அறிவித்ததோடு சம்பவ இடத்துக்கும் விஜயம்செய்தார்.
இதன்போது தோட்டத்தில் கரகம் பாலித்தல் நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருந்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பெரும்பான்மையினர், தோட்ட மக்களைத் தாக்கியுள்ளனர். இதன்போது, சம்பவ இடத்திலிருந்த ரூபன் பெருமாள், இரு தரப்பினருக்குமிடையே சுமூக நிலையை ஏற்படுத்த முயற்சித்தபோது, பெரும்பான்மையின இளைஞர்கள் சிலர் அவருக்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
நிலைமையை சமாளிப்பதற்காக கரகம் பாலித்தல் நிகழ்வு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதுடன் ரூபன் பெருமாளின் வேண்டுகோளுக்கிணங்க பொலிஸ் பாதுகாப்பு கிடைக்கப்பெற்றதையடுத்து, கரகம் பாலித்தல் நிகழ்வு தொடர்ந்து இடம்பெற்றது.
இச்சம்பவத்துக்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டுமென தோட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
போபெத்த தோட்டத்தில் சுமூக நிலைமை ஏற்படும் வரை பொலிஸ் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட தாம் முன்னிற்பதாகவும் தோட்ட இளைஞர்களைத் தாக்கியவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டுமெனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.
'1997 ஆம் ஆண்டு இடம்பெற்ற இரத்தினபுரி, வேவல்வத்த இன முறுகலின்போது பல தோட்டத் தொழிலாளர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. எனவே, குறித்த விடயம் தொடர்பாக உடனடி நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொள்ள வேண்டும்' என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .