2026 ஜனவரி 21, புதன்கிழமை

‘உறுதிபத்திரம் பெற்றுக்கொடுக்கப்படும்’

Niroshini   / 2021 ஏப்ரல் 27 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-துவாரக்ஷான்

பொகவந்தலாவை  சென். மேரிஸ் கல்லூரிக்குச் சொந்தமான காணியை,  உரிய முறையில் அளவீடு செய்து, அதற்கான  உறுதிப்பத்திரம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென,  நோர்வூட் பிரதேச சபைத் தவிசாளர் கே. குழந்தைவேல் ரவி தெரிவித்தார்.

அண்மையில் நடைபெற்ற சபை மாதாந்த அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், சென். மேரிஸ் கல்லூரி அமைந்துள்ள வளாகத்தின் ஊடாக வாகனப் போக்குவரத்து இடம்பெற்று வருவதால், மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு பெரிதும் இடையூறாக இருப்பதாகவும் கூறினார்.

இந்நிலையில், இந்த வீதியூடான வாகனப் போக்குவரத்துக்கு மாற்று பாதையொன்றை அமைத்துக் கொடுப்பதற்கு, பிரதேச சபை ஊடாக ஏற்பாடு செய்த போது, கல்லூரியின் காணியை பிரதேச சபை அபகரித்துக் கொள்ள முயற்சி செய்வதாக சிலர் வதந்திகளைப் பரப்பி, பொதுமக்களை திசை திருப்பி வந்தார்களெனவும், அவர் சாடினார்.

இந்நிலையில், இம்மாதம் 17ஆம் திகதியன்று, கல்லூரியின் காணியை அளவீடு செய்ய சிலர் முயற்சி மேற்கொண்டிருந்தார்களெனவும் ஆனால், அரசாங்கத்தின் அனுமதி பெற்ற நில அளவையாளர் எவராலும் இந்தக் காணி அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும், அவர் கூறினார்.

போலி முகவர்களைக் கொண்டே, இந்தக் காணி அளவீட்டு பணி முன்னெடுக்கப்பட்டதாகச் சாடிய அவர், அரச நிறுவனங்களின் காணியை கண்டபடி யாரும் அளவீடு செய்ய முடியாதென்பதால், இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

எனவே, சென். மேரிஸ் கல்லூரி,  நோர்வூட் பிரதேச சபை நிர்வாகத்துக்குட்பட்ட எல்லையில் அமைந்துள்ளதால், அந்தக் காணியை அளவீடு செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தமக்கு இருப்பதாகத் தெரிவித்த அவர், இதற்கமைய,  அரசாங்கம் அனுமதி பெற்ற நில அளவையாளரைக் கொண்டு, இந்தக்  காணியை அளவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.

இது சம்பந்தமான ஆவணங்களை, “சீடா” நிலையத்திலிருந்து பெற்று அதிபரின் கவனத்துக்கும் கொண்டு வந்துள்ளதாகவும் காணி அளவீடு செய்த பின்னர், அங்குள்ள விளையாட்டு மைதானத்தைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்துக் கொடுக்கப்படுமெனவும், அவர் கூறினார்.

அதேபோல், காணிக்குத் தேவையான எறுதிப் பத்திரமும் பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான வழிகாட்டலும் வழங்கப்ட்டு, கல்லூரியின் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுமென்றும், குழந்தைவேல் ரவி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X