2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

ஊவா மாகாண சபை அமர்வில் பெரும் அமளி துமளி

Editorial   / 2017 செப்டெம்பர் 14 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். செல்வராஜா

 

ஊவா மாகாண சபையின் ஆட்சி, இரு வாரங்களுக்குள் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கூறியதாக ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து, சபையில் பெரும் அமளி துமளி ஏற்பட்டது.  

ஊவா மாகாண சபை அமர்வு, இன்று (14) சபைத் தலைவர் ஏ.எம். புத்ததாச தலைமையில், சபை மண்டபத்தில் இடம்பெற்றது.  

சபை அமர்வு ஆரம்பமானதும், சபையின் எதிர்க்கட்சித் தலைவர்
ஆர்.எம். ரத்னாயக்க, ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது, ஊவா மாகாண சபையின் ஆட்சியை, மாற்றியமைத்து ஐக்கிய தேசியக் கட்சி மயப்படுத்த, இரு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதாக, ஊடகங்களில் செய்தி வெளியாகியது.  

இது விடயமாக, ஊவா மாகாண சபையில் ஆளும் கட்சி உறுப்பினர்களால் பிரஸ்தாபிக்கப்பட்டது. சபையின் எதிர்க்கட்சித் தலைவர் இச்சபையில் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று, சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.  

இதையடுத்து, சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.எம்.ரத்னாயக்க உரையாற்றுகையில், 

“ஊடகவியலாளர் சந்திப்பின் போது, என்னால் கூறப்பட்டதாகக் கூறப்பட்டு, வெளியான செய்தி தொடர்பாக எவருக்கும் மனத்தாக்கங்கள் மற்றும் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்குமானால், அதையிட்டு மனம் வருந்துகின்றேன். அத்துடன், இச்சபையில் 20ஆவது அரசமைப்புத் திருத்தச்சட்டமூலம் தோல்வியுற்றமைக்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எமது முதலமைச்சருக்கு தொலைபேசி ஊடாக வாழ்த்துக்கூறியதை, சபையின் கவனத்துக்குக் கொண்டு வருகின்றேன். மேலும், ஊடகங்களில் தற்போது வெளிவரும் செய்திகள் குறித்து அலட்டிக் கொள்ள வேண்டாம்” என்றார்.  

இதற்கு பதிலளித்த மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, 

“எமது சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.எம்.ரத்னாயக்க, மாகாண முதலமைச்சராக வரவேண்டுமானால், ஜனாதிபதியின் அனுமதியுடன் வரவேண்டும். அப்படி வந்தால், எனது முதலமைச்சர் பதவியை நானாகவே வழங்குவேன். அதைவிட்டு பின் கதவுகளால் அவர் முதலமைச்சராவதற்கு வாய்ப்புகள் இல்லை. மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நான் தொலைபேசியில் கதைத்தாக, எதிர்க்கட்சித் தலைவர் கூறினார். என்னுடன் யார் தொலைபேசியில் பேசினாலும், நான் பேசுவேன். முன்னாள் ஜனாதிபதி தான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, 20ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலம் தோல்விக்கு வாழ்த்து கூறினார்.   

இந்தச் சட்டமூலத்தில் சில தவறுகள் இருக்கவே செய்கின்றன. அத்தவறுகள் திருத்தப்பட்டு, மீளவும் சபையில் சமர்ப்பிக்கப்படும்போது, அதனை எமது சபையும் அங்கிகரிக்கும். இது விடயமாக ஜனாதிபதியிடமும் தெளிவாகக் கூறியுள்ளோம்” என்றார். 

சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.எம்.ரத்னாயக்க, ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூறிய கூற்றுகள் தப்பானதென்று, பலரும் கருத்துத் தெரிவித்ததையடுத்து, ஆளும்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆகியோருக்கிடையில் கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டு, சபை அமர்வு அமலி துமலியாகியது. பின்னர் சபை அமைதிக்குக் கொண்டு வரப்பட்டது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .