2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

கணவனை கொலை செய்த மனைவிக்கு மறியல்

Gavitha   / 2016 பெப்ரவரி 25 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவங்ச

பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட , அட்டாம்பிட்டிய பகுதியின் எல்லவெல தோட்டத்தில், கணவனை கொலை செய்தார் என்று குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்ணை, எதிர்வரும் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வெலிமடை நீதவான், நேற்று வியாழக்கிழமை (25) உத்தரவிட்டார்.

குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், மனைவியை கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) கைது செய்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இதன்போது, சந்தேக நபரிடம் வாக்குமூலத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

'எனது கணவர், வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததை அறிந்த பின்னர், அவரை நான் கொலை செய்தேன்' என்று குறித்த பெண் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவருடைய வாக்குமூலத்தில், 'எனக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, எனது கணவர் என்னை வைத்தியசாலையில் அனுமதித்தார். வைத்தியசாலையிலிருந்து வீட்டுக்கு திரும்பினேன். மறுநாள் காலை எப்போதும் போன்று எனது வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பித்தேன்.

எனது இரண்டு மகன்மாருக்கும் உணவு சமைத்துக்கொடுத்த பின்னர், இரண்டாவது மகனை மேலதிக வகுப்புக்கு அழைத்துச் செல்வதாக கூறிவிட்டு கதவை மூடினேன். எனது கணவர் அறைக்குள் தூங்கிக்கொண்டிருந்தார். பெரியதொரு கல்லை எடுத்து, எனது கணவரின் தலையில் போட்டு அவரை கொலை செய்தேன். அந்த கல்லை எடுத்து வீட்டின் பின்புறத்திலுள்ள பூங்காவில் மறைத்து அதன் மேல் குப்பைகளை போட்டு வைத்தேன். பின்னர், முச்சக்கரவண்டி ஒன்றை எடுத்துக்கொண்டு வைத்தியரை பார்ப்பதற்காக சென்றேன். எனினும் அங்கு வைத்தியர் இருக்காததனால் நான் திரும்பி வந்துவிட்டேன்.
வீட்டுக்குள் வந்து கணவனின் நிலையை பார்த்து நான் பயந்துவிட்டேன். எனது கணவரை யாரோ கொலை செய்துவிட்டார்கள் என்று கத்தி கதறினேன்' என்று அவருடைய வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். எல்லவெல தோட்டத்தைச் சேர்ந்த நடராஜா ராஜேந்திரன் (வயது 48) என்ற தோட்டத் தொழிலாளியே இவ்வாறு மனைவியின் தாக்குதலில் உயிரிழந்தவராவார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .