2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

தோட்ட பாடசாலைகள் தொடர்பில் கவனம் செலுத்தவும்: ஸ்ரீதரன்

Sudharshini   / 2016 பெப்ரவரி 14 , மு.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

'பெருந்தோட்ட பகுதிகளில் குறைந்தளவிலான மாணவர்களை கொண்டு இயங்கும் பாடசாலைகள் குறித்து, பெற்றோரிடத்தில் நம்பிக்கையற்ற நிலைமை தோன்றியுள்ளதால் இத்தகைய பாடசாலைகளை தொடர்ந்து சிறப்பாக இயங்கச் செய்வதற்கு கல்விச் சமூகத்தினரும் நலன்விரும்பிகளும் கூடிய கவனம் செலுத்த வேண்டும்' என மத்திய மாகாண கல்வியமைச்சின் கண்காணிப்பு உறுப்பினரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

பொகவந்தலாவை ரொப்கில் தமிழ் பாடசாலையில் இடம்பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.   

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'தோட்டங்களைச் சூழ பாடசாலைகள் அமைந்துள்ளதன் காரணமாக மாணவர்களுக்குக் கல்வியறிவு கிடைக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், இந்த பாடசாலைகளில் மாணவர்கள் உள்வாங்கப்படும் வீதம் குறைந்துள்ளதால் சில பாடசாலைகள் தொடர்ந்து இயங்க முடியாத நிலை தோன்றியுள்ளது' என்றார்.

'அதிபர், ஆசிரியர் நியமனங்கள், வளப்பகிர்வு அடிப்படையில் பாடசாலைகளுக்கிடையில் ஏற்றத்தாழ்வு காணப்படுவதாக பெற்றோர்கள் நினைக்கின்றனர். இதன் காரணமாக, தமது பிள்ளைகளை வளங்கள் உள்ள பிரசித்திப் பெற்ற பாடசாலைகளில் சேர்ப்பதில் ஆர்வமாக உள்ளனர்.

எனவே, தோட்டப் பகுதிகளிலுள்ள பாடசாலைகளிடத்தில் நம்பிக்கையை ஏற்படுத்துவதில் பாடசாலை நிர்வாகமும்; பாடசாலை சமூகமும்; அதிக அக்கறை செலுத்த வேண்டும். தமது தோட்டத்தில் பாடசாலை இருக்கின்றபோது தூரப்பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்வார்களானால் நாளடைவில் மாணவர் இடைவிலகலானது அதிகரிக்கக்கூடிய வாய்ப்புள்ளது. இதனை கல்வி அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக்கொண்டு தோட்டப் பகுதிகளிலுள்ள பாடசாலைகள் குறித்து அதிக கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்' என்றும் அவர் கூறினார்.

பொகவந்தலாவை ரொப்கில் பாடசாலையானது, ஹட்டன் கல்வி வலயத்தில் மிகவும் பின்தங்கிய பாடசாலையாகும். இந்தப் பாடசாலையில்தான் எனது முதல் ஆசிரியர் நியமனம் கிடைத்தது. இவ்வாறான  பாடசாலையில் நான் சேவையாற்றியதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். இப்பாடசாலையின் தேவைகள் குறித்து எதிர்காலத்தில் கூடிய அக்கறை செலுத்துவேன்' என்று அவர் மேலும் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .