Gavitha / 2016 ஜூலை 23 , மு.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
'தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்ட 2,500 ரூபாயும் கூட்டு ஒப்பந்த அடிப்படையில் கிடைக்க வேண்டிய சம்பள உயர்வும் இதுவரை கொடுக்கப்படாததையிட்டு, ஒரு தொழிற்சங்கவாதி என்ற அடிப்படையில் நான் மிகவும் வேதனையடைகின்றேன்' என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் மத்திய மாகாண சபை உறுப்பினர் சிங்பொன்னையா தெரிவித்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
'பெருந்தோட்டங்கள் பெரும் நட்டத்தில் இயங்குவதாக தோட்ட முதலாளிமார் சம்மேளனம் மற்றும் பெருந்தோட்ட கம்பனி உரிமையாளர்கள் கூறுவது மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது. தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதற்கு தொழிலாளர்கள் பொறுப்பல்ல. தேங்காய், கொக்கோ போன்ற ஏனைய பொருட்களை இலங்கை ஏற்றுமதி செய்தாலும் அதிக அண்ணிய செலவாணியை இலங்கைக்கு ஈட்டித் தருவது தேயிலையே ஆகும். தேயிலை ஏற்றுமதி மூலம் இலங்கைக்கு 85 சதவீத இலாபம் கிடைக்கின்றது' என்று அவர் கூறினார்.
'தற்போது தோட்டங்களுக்கான சலுகைகள் குறைந்துக்கொண்டே போகின்றது. அன்று, தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளை பாடசாலைக்கு கூட்டிச்செல்வதற்கு கங்காணியொரருவர் இருந்தார். மருந்துக்கென்று ஒரு கங்காணி இருந்தார். தோட்டங்களுக்கென்று தனியான வைத்தியசாலைகள் இருந்தன. இவ்வாறான சலுகைகள் இப்போது எங்குமே இல்லை' என்று அவர் சுட்டிக்காட்டினார்.
'இன்று பெருந்தோட்டங்களை நடாத்துக்கின்ற 24 கம்பனிகளும், தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வருவதுமில்லை. இதுவரை எதுவுமே செய்ததுமில்லை. மக்களுக்கான குடிநீர் வசதி, மலசல கூடங்கள் வசதி போன்றன கூட செய்துக் கொடுக்கவில்லை. இவை எல்லாம் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளும் அமைச்சர்களும் செய்து கொடுப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. கம்பனிகள் தங்களின் கடமைகளிலிருந்து ஒதுங்கி விடுகின்றார்கள்' என்று அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
இன்று தோட்டங்களில் வேலை செய்வதற்கு தொழிலாளர்கள் மிககுறைவாகவே காணப்படுகின்றார்கள் என்று தெரிவித்த அவர், இன்று வெளியிடங்களுக்கும் கொழும்பு போன்ற புற நகரங்களுக்கும் வேலையை தேடி போக வேண்டிய சூழ்நிலைக்கு மலையக மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வருமானம் குறைந்த அளவில் கிடைப்பதும், வாழ்க்கைச்செலவு அதிகரித்துக்கொண்டுச் செல்வதுமே இதற்கு காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
'பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக, ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளமை குறித்து அறிந்துக்கொண்டேன். கல்வியைத் தொடரமுடியாத சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். பொருளாதார பிரச்சினையே இவை அனைத்துக்கும் அடிப்படை காரணமாக அமைந்துள்ளது' என்ற அவர் ஊடகவியலாளர் மாநாட்டின் போது குறிப்பிட்டார்.
'தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு, வெறுமனே தோட்ட தொழிலாளர்களினதும் பெருந்தோட்ட கம்பனிகளினதும் சொந்தப்பிரச்சினை என்று, தோட்ட தொழிலாளர்களை அரசாங்கம் கைகழுவி விட்டிருக்கிறது. தோட்ட தொழிலாளர்கள் சிறுபான்மை இனத்தவர்களாக இருக்கின்றமையால், அவர்களது அபிலாசைகளை அறிந்து அவர்களுக்கு வழங்க வேண்டிய வேதன உயர்வையும் உரிமைகளையும் வழங்குவதற்கு, அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் மலையக மக்களின் வாழ்வாதார பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டிய கடமை அரசாங்கத்துக்கு உண்டு. தேசிய நீரோடையில் அனைவருக்கும் சமபங்கு அளிக்க வேண்டும். சிறுபான்மை மக்களால் இந்த அரசாங்கத்துக்கு வழங்கிய ஒத்துழைப்பை உதாசீனம் செய்யாமல் இருப்பது எல்லோருக்கும் நன்மை அளிக்கும்' என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago