2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

தங்க சங்கிலிக்காக பெண் படுகொலை

Janu   / 2025 பெப்ரவரி 02 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலியை அபகரிப்பதற்காக பெண் ஒருவர்  படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இரத்தினபுரியில் இடம்பெற்றுள்ளது.

இரத்தினபுரி வேவல்வத்த பொலிஸ் பிரிவில் கலபட பகுதியில் கருகப்பட்டை தோட்டத்தில் இருந்து பெண் ஒருவரின் சடலம் கடந்த 31 திகதி கைப்பற்றப்பட்டது.

இரத்தினபுரி பன்னில,நிரிஎல்ல பகுதியை வசிப்பிடமாக கொண்ட, இரண்டு பிள்ளைகளின் தாயான  சுதுஹக்குருகே சோமாவதி (வயது 58) என்பவருடையது என  அடையாளம் காணப்பட்டார்.

சடலமாக மீட்கப்பட்ட பெண்ணும் அவரது கணவரும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் அவர்களது மகனுடன் ஏற்பட்ட முரண்பாட்டின் பின்னர் கணவனும் மனைவியும் கலபட பகுதிக்கு வந்து தனியாருக்கு சொந்தமான காணியில் தங்கியிருந்து அவரது தோட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார்கள்.

நாளாந்தம் மாலையில் அந்த பெண்ணின் கணவன் கலபட சந்தியில் உள்ள வியாபார நிலையங்களுக்கு சென்று வருவார்.

கடந்த 30 ஆம் திகதி மாலை 6.30 மணி அளவில் வழமை போல் கலபட பகுதியில் உள்ள வியாபார நிலையத்திற்கு  சென்று சில பொருட்களை கொள்வனவு செய்து கொண்டு திரும்பி வந்துள்ளார்.

வீட்டிற்கு வந்த கணவர்  அவரது மனைவியை காணவில்லை  என்பதால்   அதிர்ச்சியடைந்து  காவலாளியின் உதவியுடன் வீட்டை சுற்றி தேடியுள்ளார்.

 வீட்டை சுற்றி தேடி கிடைக்காததால் 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவித்த பின்னர் வேவல்வத்த பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

 பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் நிலைய அதிகாரிகள் அயலவர்களின் உதவியுடன்  தேடி பார்த்த போது வீட்டில் இருந்து சுமார் 150 மீட்டர்  தொலைவில் உள்ள கருகப்பட்டை தோட்டத்தில் இருந்து குறித்த பெண்ணின் சடலத்தை கண்டுள்ளார்கள்.

கடந்த 31ஆம் திகதி காலை சம்பவ இடத்திற்கு வந்த இரத்தினபுரி மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவினர் குறித்த  பகுதியை சோதனை செய்ததுடன் விசாரணைகளையும் மேற்கொண்டார்கள்.

 இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியும் சம்பவ இடத்திற்கு வந்து குறித்த பகுதியை சோதனை செய்ததுடன் சடலத்தை பரிசோதனை செய்தார்.

மேலும்   இரத்தினபுரி நீதிமன்றத்தின் கடமை நேர நீதவான் வருகை தந்து சம்பவ இடத்தை பார்வையிட்ட பிறகு சடலத்தை பிரேத ப‌ரிசோதனை‌க்காக இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டது.

 கடந்த 1ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அப் பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது. அதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அதே தோட்டத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 35 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார்.

 இவர் கசிப்பு தயாரிப்பில் ஈடுபடுபவர் என்றும் அவருக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளது என்பதும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .