2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

தமிழ் மக்களுக்கான தீர்வினை பிரதமரிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியாது

Sudharshini   / 2016 பெப்ரவரி 13 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் பொதுத் தேர்தலின் போதும் வீர வசனங்களும் ஆவேச அறிக்கைகளும் வெளியிட்டவர்கள், இன்று தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிர்ச்சினையில் வாய்மூடி போயுள்ளார்கள். தொழிலாளர்களின் சம்பள உயர்வு இன்று கானல் நீராய் போயுள்ளது. இன்று இந்த நாட்டில் மோசமான பொருளாதார பிரச்சினையில் சிக்கித் தவிப்பவர்கள் எமது தோட்டத் தொழிலாளர்களே என முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து தோட்டத் தொழிலாளர்கள் உட்பட தமிழ் மக்களுக்கான தீர்வினை ஒரு போதும் பெற முடியாது. மறைமுக சிங்கள தீவிரவாதியாக பிரதமர் செயல்பட்டு வருகின்றார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'தமிழ் மக்களின் அனைத்து பிரச்சினைகளும் நல்லாட்சியின் ஊடாக தீர்க்கப்படும் என்று கூறி, தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொண்டு இன்று அமைச்சரவை அமைச்சர்களாக தமிழ் தலைமைகள் உலா வருகின்றன. அரசியலமைப்பிலே மாற்றம் ஏற்படுத்துவோம் என்ற ஒரு மாயையை மக்கள் மத்தியிலே ஏற்படுத்தி விட்டு, சுதந்திர தினத்தில் தேசிய கீதத்தை தமிழில் இசைத்து எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து விட்டதாக மக்களுக்குக் காட்ட முனைகிறார்கள்.

பொதுத் தேர்தலுக்கு முன்பு அப்பாவி தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை சம்பந்தமாக இவர்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தடுமாறி போயுள்ளார்கள். கடந்த அரசாங்கத்தின் போது பதவியில் இருந்த அமைச்சர்களைப் பார்த்து கை நீட்டி குற்றம் சுமத்தியவர்களுக்கு, ஏன் இன்று தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை சம்பந்தமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசி முடிவெடுக்க முடியாமல் போயுள்ளது. பிரதமர ரணில் விக்கிரமசிங்கவுடன் முரண்பட்டால் தங்கள் இருப்புக்கு ஆப்பு வைத்து விடுவார் என்பது இவர்களுக்கு நன்றாக தெரியும்;. அதனால், இன்று செய்வதரியாமல் தடுமாறி இருக்கின்றார்கள்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையினை நல்லாட்சியினூடாக தீர்த்து வைப்போம் என்று கூறி தொழிலாளர்களின் வாக்குகளைப் பெற்று இன்று அமைச்சரவை அமைச்சர்களாக இருப்பவர்கள், வாய் மூடி இருக்கின்றனர்.

தென்னிலங்கையில் இருக்கும் தங்களை தமிழ் அமைச்சரவை அமைச்சர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் பஜெட் விவாதத்தின் போது, ஒன்றுப்பட்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்க்க தவறிவிட்டார்கள். இனியாவது ஒன்று சேர்ந்து ஜனாதிபதியின் கவனத்திற்கு தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை கொண்டு வந்து தீர்த்து வைக்க வேண்டும் என அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .