2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும்

Kogilavani   / 2016 மார்ச் 11 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகமெங்கிலும் உள்ள பிரதேச சபைகளிலும் மாநகர சபை மற்றும் நகரசபைகளில்; தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப-தலைவரும் சட்டத்தரணியுமான கா.மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிமன்றங்கள் தொடர்பான கருத்தறியும் குழுவுக்கு இ.தொ.காவின் பிரேரணைகளை சமர்ப்பித்தப்பின், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் கூறினார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது,

'மலையகத்திலுள்ள மக்கள் தொகையினடிப்படையில், உறுப்பினர்களை நாம் கணிசமாக பெற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ளும் வகையில் தொகுதிகளை வரையறை செய்து, விஸ்தீரணப்படுத்த வேண்டியது அவசியம்.

அம்பகமுவ, நுவரெலியா பிரதேசங்களில் மட்டும் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் செறிந்து வாழ்கின்றார்கள். எனவே, அவர்களுக்குத் தேவையான அபிவிருத்தி மற்றும் பொது வசதிகள், திருத்தப் பணிகளை முன்னெடுக்க வேண்டிய அவசியத்தேவை உள்ளூராட்சிமன்ற பிரதிநிதிகளுக்கு உண்டு' என்றார்.

'எனவே, இ.தொ.காவின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானின் பரிந்துரைக்கேற்ப, உள்ளூராட்சி மன்றங்களில் மலையக மக்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும். நல்லாட்சியில், தோட்ட மக்களின் அபிலாஷைகள், அவர்களது சகலவிதமான எதிர்பார்ப்புகள், வரப்பிரசாதங்கள் அனைத்தும் உள்ளூராட்சிமன்றங்கள் மூலம் உள்வாங்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்' என்று கூறினார்.

'தொகுதிவாரியாக இருந்தாலும்சரி, விகிதாசார முறையாக இருந்தாலும் சரி, எது எவ்வாறாயினும் மலையக மக்களுக்கு அதிகப்பட்ச சேவை வழங்கியாக வேண்டும் என்பதே இ.தொ.காவின் பூரண எதிர்பார்ப்பாகும். அபிவிருத்தி வேலைத் திட்டங்கள், தோட்டங்களை நோக்கிக் கொண்டு செல்வதற்கான ஒரு பாதையாக உள்ளூராட்சிமன்றங்கள் அமைய வேண்டும்' என்றார்.

'எனவே, தமிழ்மக்கள், தங்களது அபிவிருத்திச் செயற்பாடுகளை தடையின்றி மேற்கொள்ளும் வகையில், இந்த
உள்ளூராட்சிமன்றங்கள் அமைக்கப்படுதல் வேண்டும்' என சட்டத்தரணி கா.மாரிமுத்து மேலும் வலியுறுத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .