2026 ஜனவரி 21, புதன்கிழமை

’தொப்புள்கொடி உறவு பலப்படுத்தப்பட வேண்டும்’

Kogilavani   / 2021 மே 03 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத் தலைவர்கள் இலங்கை வாழ் மலையகத் தமிழ் மக்களை இந்தியாவிலுள்ள “மலைவாழ் மக்களாகவே” கருதி வருகின்றார்கள் என்றும் புதிய முதல்வராக பதவியேற்கவுள்ள  மு.க.ஸ்டாலின் காலத்திலாவது, மலையக மக்கள், மலையகத் தமிழ் மக்களாக மதிக்கப்பட்டு தொப்புள்கொடி உறவு பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கையில் குறிப்பாக மலையகத்தில் தமிழ்நாட்டு அரசியல் மற்றும் தமிழ்த் திரைப்படங்களின் தாக்கம் தொன்று தொட்டு இயல்பாகவே ஈர்க்கப்பட்டு வந்துள்ளது. பெரியார், அறிஞர் அண்ணா முதலானோரின் பகுத்தறிவுக் கருத்துகளோடு, கலைஞரின் திரைப்பட வசனங்களில் பெரிதும் கவரப்பட்ட சந்ததிகளின் வழிவந்த மக்கள் இன்றும் தமிழக அரசியல் நிலைமைகளை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு வருகின்றார்கள்.

“இருந்தும் தமிழக அரசியல் தலைவர்கள் இங்குள்ள மலையக மக்களை, இந்தியாவில் உள்ள மலைவாழ் மக்களாகவே நினைத்துக் கொண்டும் பேசிக் கொண்டும் வருகின்றார்கள். அந்த நிலைமை புதிய முதல்வர் மு.க. ஸ்டாலின் காலத்தில் நீங்கி மலையக மக்களுக்கு உரிய அங்கிகாரம் கிடைக்கும் வகையில் அவரின் செயற்பாடுகள் அமைய வேண்டும். மலையக மக்களுக்கு சுபிட்சம் கிடைக்கும் வகையில் தமிழகத்துக்கும் மலையகத்துக்குமான தொப்புள்கொடி உறவு மேன்மையடைய வேண்டும்.

“இந்திய மத்திய அரசாங்கம் மலையக மக்கள் மீது காட்டியுள்ள அக்கறை, தமிழக அரசியல்வாதிகளால் இதுவரை காலமும் காட்டப்படவில்லை. பாரதப் பிரதமர் மோடி தமது காலத்தில் மலையகத்துக்கு நேரடி விஜயத்தை மேற்கொண்டு 10 ஆயிரம் வீடுகளைக் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளார். அதேபோல், எதிர்காலத்தில் தமிழக முதல்வரின் பார்வை மலையகத்தின் மீதும் படர வேண்டும்.

“ஜனநாயகம், தமிழ் உணர்வு, மொழியுரிமை போன்றவற்றின் ஊடாக தமிழகத்தில் முதல்வராக தெரிவாகி உலகத தமிழர்களின் ஒட்டு மொத்தக் குரலாக ஒலிக்கக் கூடிய அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதில் மலையகத் தமிழ் மக்களும் உள்வாங்கப்படும் வகையில் தமிழக முதல்வரின் சொல்லும் செயலும் அமைய வேண்டும் வாழ்த்துகிறேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X