2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

பல்லவிபாடும் பணிப்பாளரின் கதிரையை மாற்றவும்:ஸ்ரீதரன்

Sudharshini   / 2016 ஜூலை 05 , மு.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக,  மாணவரின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாகவும் இதனால், வலயக் கல்விப் பணிப்பாளரை மாற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்' எனவும் மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், மாகாண சபையின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளார்.

மத்திய மாகாண சபை அமர்வு கண்டி, பல்லேகலையிலுள்ள மாகாண சபை கட்டடத்தில் இன்று (5) காலை 10 மணிக்கு சபைத் தலைவர் எல்.டி.நிமலசிறி தலைமையில் ஆரம்பமானது. தனிப்பட்ட காரணங்களை தெரிவித்தல் என்ற விடயப்பரப்பின் கீழ் உரையாற்றும்போதே மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் இவ்விடயத்தை சபையின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

இங்கு மேலும் உரையாற்றிய அவர்,  ஹட்டன் கல்வி வலயத்துக்கென நியமிக்கப்பட்டுள்ள கல்விப் பணிப்பாளரின் நடவடிக்கைகள் தொடர்பாக கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள் பெரும் மன உளைச்சல்களுக்கு ஆளாகியுள்ளதாகவும் இதனால், ஹட்டன் கல்வி வலயத்தின் கல்வி வளர்ச்சியில் பெரும் பாதிப்புக்கள் ஏற்படுமென்றும் தெரிவித்து மகஜரொன்றை  ஒன்றிணைந்த ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு  எம்மிடம் சமர்ப்பித்துள்ளது.

இந்த மகஜரில் குறிப்பிட்டுள்ள விடயங்களை இந்தச் சபையின் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகின்றேன்.

ஹட்டன் கல்வி வலயத்தில் 50 ஆசிரியர்கள் வலயக் கல்விப் பணிப்பாளரின் தனிப்பட்ட விருப்பத்துக்கேற்ப இடமாற்றம் பெற்றுள்ளனர். இந்த ஆசிரியர் இடமாற்றத்தின் போது ஆசிரிய இடமாற்ற சபையின் ஆலோசனைகள் பெற்றுகொள்ளவில்லை.  

2015ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளில்  மாணவர் குறைந்த சித்தியை பெற்றமைக்கு  ஆசிரியர்களே காரணமென்றும் இதற்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்போவதாகக்கூறி மேற்படி பணிப்பாளர் ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

ஹட்டன் வலயத்திலுள்ள கல்வி சமூகத்தினருக்கு உரிய பொறுப்புக்கள், மதிப்புக்கள் வழங்கப்படுவதில்லை  என்றும்  அதிபர், ஆசிரியர்களை 'பொத்து , மூடு , பல்லகாட்டாதே , யூனியனுக்கு குடு, ஆட்டிக்கிட்டு இருக்காத, வாய மூடு, வேலயபாரு' போன்ற கொச்சைத்தனமான வார்த்தைகளால் தூற்றுவதாகவும்  அம்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆசிரிய ஆலோசகர்களையும் ஆசிரியர்களையும் பீதிக்கு உள்ளாக்குவதற்கு புலனாய்வுப் பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் மகஜரில் மேலும் கூறப்பட்டுள்ளது.  எனவே, ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும்' என அவர் கோரினார்.

இதற்கு பதிலளித்து உரையாற்றிய சபை முதல்வர், இவ் விடயம் மத்திய மாகாண முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுச்செல்லப்படுமென்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .