2026 ஜனவரி 21, புதன்கிழமை

புதிய சிகிச்சை மையங்கள் தேவை

Niroshini   / 2021 ஏப்ரல் 28 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சேன் செனவிரத்ன, சுமணசிறி குணதிலக்க, இந்திக்க அருண குமார

 

மத்திய மாகாணத்தில், கொரோனா தொற்றாளர்கள் தீவிரமாக அதிகரித்து வருவதை அடுத்து, புதிய கொரோனா சிகிச்சை மையங்களை நிறுவதற்கான தேவை எழுந்துள்ளதாகத் தெரிவித்த மத்திய மாகாண சுகாதார சேவைகள் இயக்குநர் டொக்டர் நிஹால் வீரசூரிய, ஏற்கெனவே நிறுவப்பட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் புதிய தொற்றாளர்களை அனுமதிக்கக் கூடிய வசதிகள் இல்லை எனவும் கூறினார்.

மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில், அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கண்டி மாவட்டத்தில் 21 பாடசாலைகள் மாணவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், இதனை அடுத்த, அவர்களுடன் தொடர்பை பேணிய 500 ​மாணவர்கள், சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனரெனவும் கூறினார்.

தற்போதைய சூழ்நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்ட ஆண்களை,பிற மாகாணங்களில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களுக்கே அனுப்ப வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

இதேவேளை, மொனராகலை மாவட்டத்தில், கொரோனா தொற்றாளர்கள் அதிரித்துள்ளதால், புத்தல பிரதேச வைத்தியசாலையை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றுவதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மொனராகலை மாவட்டச் செயலாளர்  குணதாச சமரசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், இதற்கமைய இராணுவத்தின் உதவியுடன், இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும், இன்னும் 2 நாள்களில், இந்த மையத்தைத் திறப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென்றும் கூறினார்.

அத்துடன், இன்னும் சில நாள்களில், மெதகம பிரதேச வைத்தியசாலையும் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றுவதற்கு, நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, மொனராகலை இளைஞர் படை தலைமையகத்துக்குச் சொந்தமான கட்டட வளாகத்தையும் தனிமைப்படுத்தல் மையமாக மாற்றுவதற்கு  மொனராகலை மாவட்ட கொவிட்-19 பாதுகாப்புக் குழு முடிவு செய்துள்ளது.

மேலும், மாத்தளை மாவட்டத்திலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை தொடர்ந்து, நாவுல – அம்பான பிரதேச வைத்தியசாலையை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றுவதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாத்தளை – நாவுல பிரதேசத்தில், தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பிசிஆர் பரிசோதனையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X