Editorial / 2019 டிசெம்பர் 19 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
பெருந்தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்றால், தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் சுகாதாரத் திட்டங்கள் பெருந்தோட்ட மக்களைச் சென்றடையும் என, மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் தலைவர் பி.பி.சிவப்பிரகாசம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது கருத்துத் தெரிவித்த அவர்,
நுவரெலியா, மாத்தளை, கண்டி, இரத்தினபுரி, களுத்துறை, காலி ஆகிய மாவட்டங்களில் காணப்படும் பெருந்தோட்ட வைத்தியசாலைகளை அரச மயப்படுத்துவது தொடர்பாக, மனித அபிவிருத்தி ஸ்தாபனம் கடந்த நான்கு வருடங்களாக மேற்கொண்ட ஆய்வுக்கிணங்க, சுகாதார அமைச்சுடன் பல சுற்று பேச்சுவார்த்தையை மேற்கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.
200 வருட வரலாற்றைக் கொண்ட பெருந்தோட்ட வைத்தியசாலைகள், மருந்தகங்கள், பெருந்தோட்டக் கம்பனிகளாலும் தோட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழும் இயங்கி, மக்களுக்கான சேவையை வழங்கி வருகின்றது என்பது மறுக்க முடியாது என்றும் கூறினார்.
நாட்டிலுள்ள அனைத்து மக்களும், குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களும் அராசங்கத்தின் நேரடி சேவையைப் பெற்றுவரும் நிலையில், இந்தச் சேவையை, பெருந்தோட்ட மக்களும் பெறவேண்டும் என்றும் இலங்கைப் பிரஜைகளான இவர்களுக்கு, அனைத்து நலன்சார் திட்டங்களும் வழங்கப்படல் வேண்டும் என்றும் அவர் கூறினார்.
நாட்டின் வரவு-செலவு திட்டத்தின் கீழ் நிதியொதுக்கீடு செய்யப்பட்டு, சட்டரீதியாக அங்கிகரிக்கப்பட்ட சுகாதார சேவையை, இலங்கை மக்கள் அனைவரும் பெற்றுக்கொள்ளும்போது, பெருந்தோட்ட மக்களுக்கு மாத்திரம், அரசாங்கம் பாரபட்சம் காட்டுவது ஏன் என்றும் அவர் இதன்போது கேள்வியெழுப்பினார்.
எனவே, பெருந்தோட்ட சுகாதார துறையை, அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் இதன்மூலம் பெருந்தோட்ட சுகாதாரத் துறையில் பாரிய மாற்றத்தைக் கொண்டு வரமுடியும் என்றும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .